Sunday, 2 November 2014

அன்பான உதவிகள் நிறைந்த அருகாமையானது பிள்ளைகளின் கல்வியை இலகுவாக்கும்

ரமணன் விளையாட்டுக் கட்டைகளை வைத்து அடுக்கி விளையாடிக்கொண்டிருக்கின்றான்.  ஒரு கட்டத்தில் அவனால் அதை அடுக்க முடியவில்லை.  பலமுறை முயன்று பார்க்கின்றான்.
 தொடர்ச்சியான தோல்வி அவனை விரக்தியடைய வைக்கின்றது. கட்டைகளை சுழற்றி எறிந்துவிட்டு சத்தமிட்டு அழுகின்றான்.  இந்த சந்தர்ப்பத்தில் பின்வருவனவற்றில் சரியான அணுகுமுறை எது?

     1.  " இது என்ன பழக்கம். உடனே எழுந்து கட்டைகளை ஒழுங்காக வை " என்று கண்டிப்புடன் கூறுவது.

     2.  "மீண்டும் ஒரு முறை முயற்சி செய். உன்னால் முடியும் " என்று ஊக்கப்படுத்துவது.

     3.    " சிதறிய கட்டைகளை மீண்டும் ஒழுங்காக்கி அவன் எதிர்பார்த்தபடி கட்டி முடித்துக் கொடுப்பது.

     4.      விளையாடிக்கொண்டிருக்கும் அவனை நன்கு அவதானித்து அவன் விரக்தியும் கோபமும் அடைய முன்னதாகவே அவனுக்கு வேண்டிய உதவியைச் சிறிதளவாகச் செய்து அவன் விளையாட்டைத் தொடர ஊக்கப்படுத்துவது.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான்காவது விடையே சரியானது.


சிறு பிள்ளைகள் விளையாட்டின் மூலம் தான் கல்வி கற்கின்றார்கள்.  அதற்கென்றே வடிவமைக்கப் பட்ட விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும் போது அவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கின்றது. அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்கள் விரக்தியும் கோபமும் அடைந்து விளையாட்டுப் பொருட்களைப் போட்டடித்து சத்தமிட்டு அழும் நிலையும் ஏற்ப்படுகின்றது.  இதனால் அந்தப்பொழுது பயனற்றதாகிப் போவதுடன் பிள்ளைகள் கல்வி கற்கும் ஆர்வத்தையும் குறைக்கின்றது.

மாறாக பிள்ளைகள் விளையாடும் போது பெரியவர்கள் அவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்கள் பெரிதும் பயன் அடைகின்றார்கள். விளையாட்டுமூலமான கல்வியின்போது அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றபோது அவர்களுக்குக் கிடைக்கின்ற உடனடி உதவியானது அவர்களின் தன்னம்பிக்கை சிதைவதைத் தடுக்கின்றது.

அதுமட்டுமல்லாது பிள்ளைகள் தங்கள் முயற்சிகள் பெரியவர்களால் ரசிக்கப் படுவதையும் பாராட்டப்படுவதையும் பெரிதும் விரும்புகின்றார்கள்.  இதன்மூலம் அவர்கள் தமக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றார்கள்.