Wednesday, 28 January 2015

குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை வாயில் போட்டுச் சுவைப்பதன் மூலம் கல்வி கற்கின்றார்கள்.


குழந்தைகள் தம் கையில் எந்தப பொருள் அகப்பட்டாலும் அதை வாயில் போட்டு சுவைக்க ஆரம்பித்து விடுவார்கள்.  இது மிகவும் இயற்கையான ஒரு தொழிற்பாடாகும். உண்மையில் இது ஒரு கற்றற் செயற்பாடாகும்.  ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தம் ஐந்து புலன்களினூடாகவும் தான் கல்வி கற்கின்றார்கள்.  எம் ஐந்து புலன்களில் சுவை கூட ஒன்றுதானே.  குழந்தைகள் தம் சுவையுணர்வைப் பயன்படுத்திக்  கல்வி கற்கும் நோக்கில்தான் தாம் காணும் பொருட்களையெல்லாம் வாயில் போடுகின்றார்கள்.

எம்மில் சிலருக்கு இது ஒரு அருவருப்பு நிறைந்த செயற்ப்பாடாகத் தெரிகின்றது.  நான் இந்தக் கட்டுரையை எழுதுவது இவர்களுக்காகத் தான்.  குழந்தைகள் பொருட்களை வாயில் போட்டு விளையாடுவதைத் தடுப்பதன் மூலம் அவர்களின் கற்றற்  செயற்ப்பாட்டைத் தடுப்பதுடன் அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைப்பவர்களுமாகின்றோம்.  

பெரியவர்களாக இவ்விடயத்தில் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்.
பிள்ளைகளின் உயிரிற்கும் உடலிற்கும் ஆபத்தில்லாத சுத்தமான விளையாட்டுப் பொருட்களை  குழந்தைகளிற்கு எட்டக்கூடிய இடத்தில வைப்பதாகும்.  மறுதலையாக பிள்ளைகள் விழுங்கக்கூடிய சிறிய பொருட்களையும் ஆபத்தான பொருட்களையும் குழந்தைகளிற்கு எட்டாத இடத்தில் வைப்பதுமாகும்.

Sunday, 11 January 2015

பிள்ளைகளின் சீரான நித்திரையில் அப்பாக்களுக்கும் பங்குண்டு

 பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நித்திரையும் முக்கியமாகும்.  இது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். 7-8 வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகள் இரவு எட்டுமணிக்கெல்லாம் படுக்கைக்குப் போவது முக்கியமாகும்.  அதன் பின்பு அவரவர் படிப்பு வீட்டுப்பாடங்களிற்கேற்ப படுக்கைக்குச் செல்லும் நேரம் பின்தள்ளிப் போகக்கூடும்.  முக்கியமாக கைக்குழந்தைகள் உரிய நேரத்தில் நித்திரை செய்து பழகுதல் வேண்டும்.  இது நவீன கால அம்மாக்களுக்குத் தெரிந்தவிடயம்தான். இப்பொழுதெல்லாம் சிறு பிள்ளைகளிற்கென்று தனியான அறையும் கட்டிலும் கொடுக்கக்கூடிய வசதி அனேகமான  வீடுகளில் உண்டு.

அம்மாக்கள் சிறு பிள்ளைகளை சாதுரியமாக உரிய நேரத்தில் நித்திரைக்குச் செலுத்தினாலும் அப்பாக்களின் புரிந்து கொள்ளாமையினால் அதிக வீடுகளில் இது பிரச்சினையாகி விடுகின்றது.  இது அதிக அம்மாக்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டுத்தான்.

அப்பாக்கள் வீட்டில் இருக்கும்போது மிக மகிழ்ச்சியாக இருந்தால் மிகவும் சத்தமாகவும் ஆரவாரமாகவும் இருப்பார்கள்.  பிள்ளைகளின் நித்திரை நேரம் கடந்தாலும் அதுபற்றி அக்கறை இல்லாமல் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.


இரவு வேலை முடித்து நாடு ஜாமம் பன்னிரண்டு ஒரு மணிக்கு வீடு திரும்புகின்ற அப்பாக்கள் இப்போது மிக அதிகம். அந்த அப்பாக்கள் நாடு ஜாமத்தில் வீட்டில் உள்ள அத்தனை மின் விளக்குகளையும் ஏற்றி மிகவும் சத்தமாக நடமாடுவார்கள்.  அத்துடன் தொலைக்காட்டியையும் மிகச் சத்தமாகத் தூண்டிவிட்டுக்கொண்டு இருப்பார்கள். இதனால் பிள்ளைகளின் நித்திரை பாதிப்புக்குள்ளாகின்றது.   

அப்பாக்கள் இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு பிள்ளைகளின் சீரான நித்திரைக்குத் தமது பங்களிப்பையும் வளங்கவேண்டும்.  அதற்கு முதல் கட்டமாக குழந்தைகள்  இரவு எட்டுமணிக்கு  சத்தம் சந்தடியற்ற கண்ணையுறுத்தும் விளக்குகள் இல்லாத கதகதப்பான சுத்தமான படுக்கையில் படுக்கைக்குச் செல்லவேண்டும் என்ற உண்மையை அப்பாக்களும் உணரவேண்டும்.

பிள்ளைகளைக் காலையில் துயில் எழுப்புவது சிரமமான விடயமா?