Sunday, 28 December 2014

பிள்ளை வளர்ப்பும் சமையலறையும்

சமையலறையானது  சலிப்புடனும் சிரமத்துடனும் வியர்வை சிந்த வேலை செய்யும் ஓர் இடமன்று. மாறாக அது வாழ்வதற்கும், கற்பதற்கும் மகிழ்சியாக இருப்பதற்குமான ஒரு இடமாகும்.

சமையலறையானது  நிச்சயமாக உணவு தயாரிப்பதற்கான ஒரு இடமாகும். அதேவேளையில் அது பிள்ளைகளின் கற்றலுக்கும் பெற்றோர்-பிள்ளைகள் தொடர்பாடலுக்குமான ஒரு இடமாகும். அதுமட்டுமல்லாது அது வாழ்வின் மிக இனிமையான நினைவுகளைத் தரக்கூடிய ஒரு இடமுமாகும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குச் சொந்தமான பிரச்சினைகளும் இறுக்கங்களும் இருக்கும்.  சமையல் வேலை கூட சிரமம் நிறைந்ததாகவும் சலிப்பு நிறைந்ததாகவும் இருக்கக்கூடும்.ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து சமைக்கும்போது அது இனிமையான நினைவுகளைத் தரக்கூடிய இலகுவான வேலையாக மாறக்கூடும்,

சமையல் வேலையை இலகுவானதாகவும் கற்றல் செயற்பாடுகள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கான துணுக்குகள் சில:

1.  அன்றைய சமையலுக்கான உணவு திட்டமிடும்போது பிள்ளைகளின் ஆலோசனைகளையும் கேளுங்கள்.  பிள்ளைகளுக்கு பல்வேறுபட்ட சத்துக்களையும் அவைகொண்டுள்ள உணவு வகைகளையும் கற்பிப்பதற்கு இது பெரிதளவில் உதிவி செய்யும்.  உணவு வல்லுனர்களால் அங்கிகரிக்கப்பட்ட மாதிரி உணவு திட்டமிடல் கீழே உள்ளது. பிள்ளைகள் உணவு திட்டமிட அலோசனைகள் வளங்கும் போது  இந்த அமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.  இந்த அட்டவணையானது உங்கள் சமையலறையை அலங்கரிப்பதாக இருக்கலாம்

2.  சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் போது  பிள்ளைகளையும்  அழைத்துச் செல்லுங்கள்.  அப்பொழுது அவர்களுக்கு சத்துணவு தொடர்பான அறிவு வளர்வதுடன்  அவற்றின் விலை தொடர்பான விபரமும் தெரிய வருகின்றது.

3.  அடுத்ததாகச் சமையல் வேலையில் கூட பிள்ளைகளின் உதவியை நாடுங்கள்.   பிள்ளைகளுக்குச் சுத்தம் பற்றிய கருத்துக்களைச் சொல்லக்கூடிய நேரம் அதுவே.  "  தக்காளியை வெட்டுமுன்பு உன் கைகளை நன்கு கழுவு. அல்லாதுவிடில் உன் கைகளுள் உள்ள கிருமி உணவுப் பொருட்களுடன் கலந்துவிடும்.' போன்ற அறிவுரைகள் அதிக நன்மை பயப்பன.

4.  சமையல் முடிந்த பின்பு சாப்பாட்டு மேசையை அலங்கரிப்பதிலும் பிள்ளைகள் உதவி செய்ய இடமளியுங்கள்..  அவர்களின்   கற்பனைத்திறனுக்கும் இடமளியுங்கள்.  அவர்கள் தவறுகள் செய்யும் போது மிருதுவாகத் திருத்துங்கள்.

5.  குடும்பமாகச் சேர்ந்து உணவு அருந்துங்கள்.  உணவு வேளை மிக ரம்மியமானதாக இருக்க வேண்டும்.   இவ்வேளையில் பிள்ளைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.  நேர்முகமான( positive)உரையாடலுக்கு இடம் கொடுங்கள்.

6.  இப்போது மிக முக்கியமான கட்டம்.  சாப்பாட்டு மேசையையும் சமையலறையும் சுத்தம் செய்வது.  இதில் கூட பிள்ளைகளின் உதவியை அனுமதியுங்கள்.  பிள்ளைகள் தமக்கு விருப்பமான இசையைக் கேட்டபடியே சுத்தம் செய்ய அனுமதி தாருங்கள்.

சமையலறையும் சமையலும் சுத்தம் செய்தலும் அம்மாவின் வேலை என்ற மனப்பான்மையை அழித்து அது ஒரு குடும்ப வேலை  என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துங்கள்.  பிள்ளைகள் மட்டுமல்லாது அப்பாக்கள் கூட ஒரு கை கொடுக்க வேண்டும்.  

நீங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெற்றோர்?

உலகில் உள்ள பெற்றோர்கள் 4 வகையாகப் பிரிக்கப் படுகின்றார்கள்.  இதில் நிங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெற்றோர் என்பதையும் எந்த வ ஆகி சரியானது என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

வகை 1.  அதிக கண்டிப்பு உள்ள பெற்றோர்கள்  too strict parents
இவ்வகையைச் சேர்ந்த பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளுக்குக் கட்டளைகள் பிறப்பித்துக் கொ
ண்டே இருப்பார்கள்.  பிள்ளைகள் மறு பேச்சின்றி அவர்களுக்குக் கீழ்ப்படிந்தேயாக வேண்டும்.  அல்லாவிடில் அவர்களுக்கு பெரிய அளவில் தண்டனைகள் வழங்கப்படும். இவர்களின் பிள்ளைகள் எப்போதும் மகிழ்சியற்றவர்களாகவே  காணப்படுவார்கள்.  இவ்வகையான பெற்றொர்கள் தம்முடைய வழி சரியானது எனப் பெரிதும் நம்புகின்றார்கள்.  பெற்றோருக்கான தமது அறிவையும் திறனையும் விருத்திசெய்ய அவர்கள் முயற்சி செய்வதேயில்லை.

வகை 2 : கண்டிப்பு இல்லாத பெற்றோர்  too kind parents
இவர்கள் தங்கள் பிள்ளைகளின் குற்றங்களையும் குறைகளையும் இலகுவாக மன்னிக்கின்றார்கள்.  பிள்ளைகளின் வேலைகளையும் தாங்களே செய்கின்றார்கள் .  பிள்ளைகள் தம்முடைய சுயௌதவித் திறன்களை வளர்ப்பதற்கு இடமளிப்பதேயில்லை.  இங்கு பிள்ளைகள் தண்டிக்கப்படுவதே இல்லை. பிள்ளைகள் மிகவும் மகிழ்சியுடன் இருப்பார்கள்.  ஆனாலும் பிள்ளைகளுக்கு தம்முடைய தவறுகளின் கனாகனம் புரிவதேயில்லை.

வகை 3 :  அளவான கண்டிப்பும் அரவணைப்பும் உள்ள பெற்றோர்  moderate parents
இவர்கள் பிள்ளைகலின் குழப்பமான வேளைகளில் அல்லது நோய் வேளைகளில் அரவணைக்கின்றார்கள்.  பிள்ளைகளின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்கின்றார்கள்.  பிள்ளைகளுடன் நண்பர்கள்போலப் பழகுகின்றார்கள்.  பிள்ளைகள் தம்முடைய வேலைகளைச் செய்ய ஊக்கப்படுத்துகின்றார்கள்.  ஆனாலும் பிள்ளைகளுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக உதவி செய்கின்றார்கள். பிள்ளைகளின் தவறுகளை சரியான முறையில் சுட்டிக் காட்டுகின்றார்கள்.  சிறிய சிறிய வீட்டு விதிகளை அமைத்து தாமும் அதைப் பின்பற்றுகின்றார்கள்.  தமக்கான பெர்ரூருக்குரிய திறமைகளை வளர்ப்பதில் முனைப்புக் காட்டுகின்றார்கள்.

வகை 4 :  செயலற்ற  பெற்றோர்கள்  passive parents
வேலைநிமித்தமாக தம்முடைய பிள்ளைகளுக்காக ஒரு துளி நேரம்தானும் ஒதுக்கமுடியாதவர்கள்,  கடுமையான உடல்உள நோய்வாய்ப்பட்டவர்கள்,  அதிகளவில் மது, போதைவஸ்து என்பவற்றிற்கு அடிமையானவர்கள் இவ்வகையில் அடங்குவர்.  இவர்களின் பிள்ளளகள் இவர்களிடம் வழர்வதைவிட  பொருத்தமான பிற உறவினர்களிடம் அல்லது தொண்டு நிறுவனங்களிடம் வசர்வது சிறந்ததாகும்.

Thursday, 25 December 2014

பிள்ளைகள் தன்னிச்சையாக ஆராச்சி செய்து கற்றலைப் பெரிதும் விரும்புகின்றார்கள்

 பிள்ளைகள் பல வழிகளில் தன்னிச்சையாகக் கல்வி கற்கின்றார்கள்.  அதில் ஆராச்சி செய்து கற்றலும் ஒரு வழியாகும். அது அவர்களுடைய இயற்கைக் குணமாகும்.இதில் பெரியவர்களாக எம்முடைய கடமையெல்லாம் அதற்கேற்ற சூழலை ஏற்ப்படுத்திக் கொடுப்பது மட்டுமேயாகும்.  அவர்கள் கண்களுக்கும் கைகளுக்கும் எட்டக்கூடிய உயரத்தில் உள்ள பெட்டியொன்றில் பல்வேறுபட்ட பாவனையில் இல்லாத வீட்டுப் பாவனைப் பொருட்களைப் போட்டு வைத்தால் அவர்கள் அந்தப் பொருட்களை ஆராச்சி செய்வதில் அதிக நாட்டம் காட்டுவார்கள்.  பழைய பணப்பைகள், பூட்டுக்கள், திறப்புக்கள், பிளாஸ்ரிக் டப்பாக்கள், மூடிகள், வண்ண வண்ணத்துணிகள் என்பவை இந்த ஆராய்ச்சிப் பெட்டிக்குள் போட்டு வைக்கக் கூடிய பொருட்களாகும்.  2, 3 வயதுடைய பிள்ளைகள் இந்தப் பெட்டிக்குள் உள்ள பொருட்களை  ஆராச்சி செய்வதில் அதிக நாட்டம் காட்டுவார்கள்.  அதிக நேரத்தைச்  சத்தமில்லாமல் செலவிடுவார்கள்.  சிறுவயதுப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்ய முடிவாமல் அவதிப்படும்  அம்மாக்களுக்கு இவ் ஆராச்சிப்  பெட்டி பெரிதும் பயன்படும்.  ஏதோ ஒரு கட்டத்தில்  பிள்ளைகளுக்கு இதில் உள்ல பொருட்கள் எல்லாம் அலுத்துப் போகும் போது அவர்கள் அதிலுள்ள பொருட்களை எல்லாம் வீடு முழுக்க வாரி இறைக்கத் தொடங்குவார்கள்.  அப்போது அம்மாக்களின் வேலை இரட்டிப்பு மடங்காகிவிடும். எனவே அவ்வப்போது இப்பெட்டியை பிள்ளைகளின் கண்பார்வையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.  அத்துடன் ஒரே பொருட்களைப் போட்டு வைக்காமல் பெட்டியினுள்ளே வித்தியாசமான பொருட்களைப் போட்டு வைக்க வேண்டும்.