Wednesday, 25 March 2015

பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்து பள்ளிக்கு அனுப்பும்போது பிள்ளைகள் பள்ளியில் பூரணமாகத் தொழிற்படுவார்கள்











நான் மிகவும் ரசிக்கின்ற ஒரு ஆரோக்கியமான வெள்ளைக்காரக் குடும்பத்தின் கதை இது.  இது கதை கூட இல்லை.  காலை வேளைகளில் நடக்கின்ற ஒரு சம்பவம்.  இந்தக்குடும்பத்தில் இருவருமே வேலைக்குச் செல்லுகின்ற பெற்றோர்கள். இங்கு இது ஆணின் வேலை இது பெண்ணின்வேலை என்ற பேதம் இல்லை.  யாருக்கு நேரம் இருக்கின்றதோ அவர்கள் அந்த வேலையைச் செய்து முடிக்கின்றார்கள். அம்மாஅதிகாலையிலேயே  வேலைக்குச் சென்றுவிடுகின்றார்.  அப்பாவுக்கு நேரம் இருக்கின்றது.  அதனால் பிள்ளையைப் பாலர் பள்ளிக்கு அனுப்புகின்ற வேலையை அப்பாவே பொறுப்பெடுக்கின்றார்.  தனக்கான கடமையை ஒரு பெண்ணின் பக்குவத்துடனும் நேர்த்தியுடனும் செய்துமுடிக்கின்றார்.   இதனால் அவருடைய ஆண்மைக்கோ ஈகோவிற்கோ  (ego ) எந்த இழுக்கும் வந்துவிடப்போவதில்லை.  மாறாக தன்  மனைவியினதும் மகனினதும் மனதில் மிகஉயர்வாக இடம் பிடித்துவிடுவார்.

 பரவலாக எம்மவர் மத்தியில் காலை எழுந்தவுடன் பல் துலக்குகின்ற பழக்கம் தான் இருக்கின்றது.  அனால் காலையுணவு முடிந்தபின்பு பல் துலக்குவதுதான் மேலைநாடுகளில் பல்வைத்தியர்களால் பரிந்துரக்கப்படுகின்றது.  இரவு படுக்கைக்குச் செல்ல  முன்பு பல் துலக்குவது கட்டாயமானது.  அதன்பின்பு இரவு நித்திரையில் பல்லைக் கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை.இதனால் காலை எழுந்தவுடன் பல் துலக்க வேண்டிய அவசியம் இல்லை.  காலையுணவு முடிந்தபின்புதான் பல்லிடுக்குகளில் புகுந்துள்ள உணவுத்துணிக்கைகளை அகற்றுவதற்காகப்  பல்துலக்க வேண்டும்.


இந்தக்கதையில் வருகின்ற அப்பா காலையுணவு அருந்துதல், பல்துலக்குதல் போன்ற செயற்பாடுகளைப்  பிள்ளையுடன் சேர்ந்து  செய்வதால் பிள்ளைக்கு நல்ல ஆரோக்கியமான முன்மாதிரிகையாக இடுக்கின்றார்.   எம் பிள்ளைகளிற்கு நாம் எதாவது கற்பிக்க விரும்பினால் அதன் முதலாவது கட்டம் நல்ல முன்மாதிரிகையாகத் இருப்பதுதான்.


மேலும் இந்த அப்பா ' நேரம் போச்சு, நேரம் போச்சு' என்று பிள்ளையை நச்சரிக்கவில்லை.  அவசரப்படுத்தவில்லை.  எந்த சந்தர்ப்பத்திலும் பிள்ளையிடம் சுடு சொல் பாவிக்கவில்லை.   அன்பையும் அரவணப்பையும் எந்தசந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை. பாடசாலையில் அவர் பிள்ளையை ஒப்படைக்கும்போது பிள்ளைக்கு வயிறும் மனமும் நிறைந்து இருக்கின்றன.  இந்தப் பிள்ளை தன முழுத்திறமையையும் பயன்படுத்தி பாடசாலையில் கல்வி கற்காமலா போகும்.

எல்லா அப்பாக்களுக்கும் காலை 10 மணிக்குத்தான் வேலை ஆரம்பிக்கும் என்று சொல்ல முடியாது.  அனாலும் அவரவர் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடுதலும் உதவி தேவைப் படுமிடத்து உதவிபெறுதலும் தான் முக்கியம்.


4 comments:

  1. நல்ல முன் மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா.

      Delete
  2. அழகு அருமை...

    இப்படித்தான் இருக்கோணும்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா

      Delete