Tuesday, 7 November 2017

பள்ளிக் காதல்

அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள்.  ஆண் பெண் பேதமின்றிய நடப்பு அவர்களுக்குள் நிலவிக்கொண்டிருந்தது.  கேலி கிண்டல் சிரிப்பு அழுகை என்பவற்றோடு கல்வியும் வீறுநடை போட்டுக்கொண்டிருந்தது.  ஒருவர் ஒருவரிடம் கேட்டுப் படித்தல் அவர்களுக்குள் முக்கிய இடம் பிடித்திருந்தது.  தம் இயல்பறிந்து,  திறமையறிந்து,  சொந்த விருப்பறிந்து தமக்கான எதிர்காலத் திட்டங்களும் இலட்சியங்களும் அவர்களுக்குள் இருந்தது.   பரீட்சை  நெருங்குகின்ற காலங்களில் தம்மை வருத்தி கல்வி கற்பவர்கள் பரீட்சை முடிந்தபின்பு தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்தவும் தயங்குவதில்லை.  நண்பர்களாக சேர்ந்து படம் பார்க்க செல்லுதல்,  ஐஸ் குடிக்க செல்லுதல் என்று தம் பள்ளி வாழ்க்கையை அனுபவிக்கத்தான் செய்கிறார்கள்.  அந்த வகுப்பில் ஏறக்குறைய எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

அவள் நல்ல அழகி, நல்ல புத்திசாலி என்பதற்கும் அப்பால் மிகவும் அன்பானவள் என்பதுதான் உண்மை.  நேர்கொண்ட பார்வையும் தன் எண்ணங்களை நேரிடையாக ஒளிவு மறைவு இன்றி வெளிப்படுத்தும் தன்மையும் கொண்டவள்.

அவன் அவள் நண்பர்களில் ஒருவன்.  அவள் அளவிற்கு அழகன் இல்லை.  படித்த பண்பாடான பெற்றோருக்கு பிள்ளையவன்.   அவனிடம் ஒரு மிதிவண்டி உண்டு.  அவளிடம் இல்லை.  பாடசாலை விட்ட பின்பு மிதிவண்டியை உருட்டிக் கொண்டு அவளுக்கு இணையாக நடந்து வருவான்.

பேச்சு வாக்கில் தன்னிடம் ஒரு பியானோ இருப்பதாகவும் தான் சிறு வயதில் பியானோ கற்றதாகவும் கூறுகிறான்.
அவள் ஒன்றும் இசை மேதை இல்லை.  ஆனாலும் பியானோ இசை கேட்பதற்காக அவன் வீட்டிற்கு வருவதாக கூறுகிறாள்.  அவன் வீட்டிற்கு சென்றதும் அதுவரை தூசி பிடித்திருந்த பியானோவை சுத்தம் செய்து
வாசித்துப் பயிற்சி பெறுகிறான்.  நீண்ட காலமாக கேட்காத பியானோ சத்தம் கேட்பதால் பெற்றோர் ஆச்சரியப் படுகிறார்கள்.  ஏனாயிருக்கும் என்று தம்மை தாமே கேட்டுக்கொள்கிறார்கள்.

பிறிதொரு நாளில் அவன் அறைக்குள் இருந்து பியானோ சத்தம் மட்டும் அல்லாது   பேச்சு குரலும் கேட்கிறது.  பெற்றோருக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை.  அறைக்குள் எட்டிப் பார்க்கிறார்கள்.  அவன் மிக அழகாக பியானோ வசித்துக் கொண்டிருந்தான்.  அவன் அருகில் அவள் இருந்தாள்.  அவளை தங்கப் பதுமை என்று வர்ணிக்க முடியாது.  பதினேழு வயது செல்லக் குழந்தை என்று வேண்டுமானால் வர்ணிக்கலாம்.  ஒளிவீசும் கண்களால் சிரித்துக் கொண்டிருந்தாள்.  ஆடிப்போய் விட்டனர் பெற்றோர்.  இந்தப் பெண்ணுக்குள் என்ன இருக்கிறது.  அழகையும் புத்திசாலித்தனத்தையும் தாண்டி வேறு ஏதோ இருக்கிறதே.  அந்தப் பெண்ணுக்குள் இருந்த ஆளுமை அவர்களை கட்டிப்போடுகிறது.  அவள் ஒரு அப்பாவிக் குழந்தை என்பது அவளை பெற்ற அன்னைக்கு மட்டுமே தெரியும்.

அவள் சென்ற பின்பு  இரவு உணவின் போது மகனிடம்  அவள் பற்றி வினவுகிறார்கள்.  அவளுக்கும் உனக்கும் இடையில் என்ன இருக்கிறது என கேட்கிறார்கள்.  அவனுக்கு பதில் கூற தெரியவில்லை. மறு நாள் பாடசாலையில் அவளிடமே வினவுகின்றான்.  அவளுக்கும் சட்டென்று பதில் கூற தெரியவில்லை.  போதிய கால அவகாசம் எடுத்து தம்மை தாமே சோதனை செய்கிறார்கள்.  இது நட்பு தாண்டிய காதல் உணர்வு என்று இருவருமே அடையாளம் காண்கிறார்கள்.  தம் காதலை உறுதிப்படுத்துகிறார்கள்.

அவள் வீட்டிற்கு வருகிறாள்.  சப்பாத்தை கழற்றிப் போடுகிறாள்.  மேலங்கியை கழற்றிப் போடுகிறாள்.  சற்றுப் பரபரப்பாக காணப்படுகிறாள்.  அவள் அன்னை கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டு தன் மடிகணினியில் எதோ பார்த்துக்கொண்டிருக்கிறார்.  அவள் தாயின் மடி கணிணியை தாயின் அனுமதி இல்லாமலே எடுத்து மடித்து கட்டிலில் வைக்கிறாள்.  தாயின் கால்களின் மேல் மடி கணிணி இருந்த இடத்தில் அமருகின்றாள்.  அன்னைக்கு சற்று வலிக்கத்தான் செய்கிறது.  ஆனாலும் பதினேழு வயது அன்புக் குவியலொன்று மடி மீது ஏறி இருக்கும் போது பெற்றவளுக்கு கசக்கவா செய்யும்.

மடிமீது அமர்ந்தவள் மூச்சு விடாமல் நடந்த அத்தனையையும் தாயிடம் ஒப்புவிக்கிறாள்.  அன்னைக்கு தூக்கிவாரிப் போடுகிறது.  ஜீரணிக்க முடியவில்லை.  ஜீரணித்துதான் ஆகவேண்டும்.  சில வினாடிகளில் அன்னை தன்னைத்தானே சுத்தகரித்துக் கொண்டாள்.

நீங்கள் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் மீறாமல் தான் நான் அவனை தேர்ந்து கொண்டேன் அம்மா
என்றாள்.  அன்னை அப்படி என்னதான் நிபந்தனைகள் விதித்தாள் ?

                                                                                                                                                        (தொடரும் )


Thursday, 17 August 2017

மனத்துக்குப் பிடித்த சூழல் சிறுவர்களில் நன்னடத்தைகளை வளர்க்கும்

Dino வும் Hafi யும் அண்ணன்  தம்பிகள்.  9 வயது 8  வயது.  பெற்றோர் வேலைக்குச் செல்ல பராமரிப்புக்கென என்னிடம் வருகிறார்கள்.  பிரச்சனை எதுவும் இல்லை.  சேர்ந்தே விளையாடுகிறார்கள்.  புதிதாக 7 வயது யாசின் வந்தபோதுதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.  சேர்ந்து விளையாட இஸ்ரம் இல்லை.  சிறிது சிறிதாக சண்டை ஆரம்பிக்கிறது.  எந்த விதத்திலும் சமாதனப்படுத்த முடியவில்லை.  அது எனக்கும் வேலை பளுவாக  மாறுகிறது.  வீடு யுத்தக்களமாக மாறுகின்றது.  பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்வது நலமென முடிவெடுக்கிறேன்.

பிள்ளைகள் 3 பேருடன் விளையாட்டுத் திடலுக்கு விரைகின்றேன்.  விளையாட்டுத்திடலுக்கு செல்வது எந்தப் பிள்ளைக்குத்தான் பிடிக்காது.  அந்த மகிழ்ச்சியில் சண்டைகள் சற்றுக் குறையத்தொடங்குகின்றன.  இப்போது தான் ஆரம்பிக்கிறது ஆச்சரியம்.  ஆரம்பத்தில் சேர்ந்து விளையாட பின்தங்கிய பிள்ளைகள் தம்மை மறந்து சேர்ந்து விளையாடுகிறார்கள்.  விளையாட்டின் பொது பல கதைகள் பேசுகின்றார்கள்.  அந்த உரையாடல்களில் நட்பு தலை தூக்குகிறது.  சண்டைகள் மறைந்துபோகின்றன.  பிள்ளைகள் 3 பெரும் சீரான நடத்தைகளைக் காட்டுகின்றாகள்.

விளையாட்டுத் திடலில் இருந்து வீடு திரும்பும் போதும் ,  பின்பு வீட்டிலும் இந்த சமாதான உணர்வு நீடிக்கிறது.  எனக்கு மனதினுள் பொறி தட்டுகிறது.  பிள்ளைகளிற்கு பிடித்த ஆரோக்கியமான வெளிப்புறச் சூழலை கொடுக்கும் போது அவர்களில் சீரான நடத்தைகள் தூண்டப்படுகிறது.  அது விளையாட்டுத் திடலாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.  வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அதுபோன்ற இடங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்தத் தத்துவம் பிள்ளைகளிற்கு மட்டும் அல்ல பெரியவர்களும்மும் பொருந்தும்.

Wednesday, 16 August 2017

சமைத்த உணவும் சமைக்காத உணவும்



அடுப்பில் வைத்து சமைத்த உணவை விட சமைக்காத உணவுகளில் சத்து அதிகம் என்று எங்கோ படித்திருக்கிறேன்.  படித்தவுடன்  விளங்கிவிட்டது.  விளங்கியவுடன் பிடித்துவிட்டது.  அதன்பின்பு எப்போதும் நான் அதற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.  தாயகத்தில் கிராமத்தில் வாழ்ந்தவரை சமைக்காத இயற்கை உணவுகள் நாளாந்த வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை.  அந்தக் காலங்களில் அவற்றின் மதிப்புப் பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை.  நகர வாழ்க்கைதான் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது.

சமைக்காத உணவுகளின் பெறுமதி பற்றிய பூரண புரிந்துணர்வு வந்தபின் இப்போதெல்லாம் என் நாளாந்த வாழ்க்கையில் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்.  பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்து, துண்டு துண்டாக நறுக்கி சாப்பிட்டு மேசையில் அழகாக வைத்துவிடுகிறேன்.  அழகாக பல வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற இயற்கை உணவுகளை பார்த்த மாத்திரத்திலேயே பிள்ளைகளிற்கு உணவு விருப்பு ஏற்பட்டுவிடுகிறது.  மேசையடியில் இருந்து நல்ல தாராளமாக எடுத்து சாப்பிட தொடங்கி விடுகிறார்கள்.  fast food இற்கு வயிற்றில் இடமில்லாமல் போகிறது.  பிள்ளைகள் என்னதான் fast food விரும்பிகளாக இருந்தாலும் வளர்ந்த பிள்ளைகளிற்கு அவைபற்றிய விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது.  தவறு என்று தெரிந்தும் அவற்றை உண்ணும் போது அவர்களுக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது.  நான் என்  சாப்பாட்டு மேசையை சமைக்கப்படாத இயற்கை உணவுகளால் நிரப்பும் போது என் 14 வயது மகன் சமையலறையில் வைத்து என்னைக் கட்டி அனைத்து முத்தமிடுகிறார்.  ஆக என் சாப்பிட்டு மேசை எனக்கும் என் பிள்ளைகளிற்கு நல்ல அன்புறவையும் புரிதலையும் ஏற்படுத்தி தருகிறது.