Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

Tuesday, 17 August 2021

மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்லும் பிள்ளைகள்




 

இந்தப் படத்தில் உள்ள அக்காவும் தம்பியும் மகிழ்ச்சியாக உற்சாகமாக பயமில்லாமல் பாடசாலை செல்கிறார்கள்.  அதன் ரகசியம் என்னவாக இருக்கும்.

** அவர்கள் நேர்த்தியான, அளவான,  பொருத்தமான ஆடை அணிந்திருக்கிறார்கள்.  அவர்களின் ஆடைகள் அவர்களின் கல்விக்கோ விளையாட்டிற்கோ இடையூறாக இருப்பதில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலை செல்கிறார்கள். 

** அவர்கள் இருவரும் சுத்தமான ஆடைகள் அணிந்திருக்கிறார்கள்.  அதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருவதில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள். 

** அவர்கள் அன்றைய நாளுக்கான வீட்டுப் பாடங்கள் முழுவதையும் முடித்து, அன்றைய நாளுக்கு தேவையான கல்வி சாதனங்களையும் தமது புத்தகப் பையில் சீராக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** அவர்கள் நல்ல சத்துக்கள் நிறைந்த காலை உணவு உண்ட பின் பசி இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலை செல்லும் நேரத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவர்களை கவலைப்படுத்தும் எதிர்மறையான பேச்சுக்களை பேசாமல், அவர்களை உற்சாகமூட்டும் நேர்மறையான பேச்சுக்களை பேசி வழியனுப்பி வைக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலையில் ஆசிரியர்கள் அவர்களை தடி கொண்டு அடிக்காமல், சிறுமைப் படுத்தும் விதமாக கண்டிக்காமல் அன்புடனும் நட்பு மனப்பான்மையுடனும் கல்வி கற்பிக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலையில் அவர்களுக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் மனம் விட்டு பேசவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் வாய்ப்புக்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் நிச்சயமாக பாடசாலையில் அதிக அளவில் கல்வி கற்பார்கள். அதுதானே பெற்றோருக்கு வேண்டியது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது மேற்சொன்ன விடயங்களை கருத்திற் கொண்டு அனுப்புங்கள் பெற்றோரே. 

Tuesday, 7 November 2017

பள்ளிக் காதல்

அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள்.  ஆண் பெண் பேதமின்றிய நடப்பு அவர்களுக்குள் நிலவிக்கொண்டிருந்தது.  கேலி கிண்டல் சிரிப்பு அழுகை என்பவற்றோடு கல்வியும் வீறுநடை போட்டுக்கொண்டிருந்தது.  ஒருவர் ஒருவரிடம் கேட்டுப் படித்தல் அவர்களுக்குள் முக்கிய இடம் பிடித்திருந்தது.  தம் இயல்பறிந்து,  திறமையறிந்து,  சொந்த விருப்பறிந்து தமக்கான எதிர்காலத் திட்டங்களும் இலட்சியங்களும் அவர்களுக்குள் இருந்தது.   பரீட்சை  நெருங்குகின்ற காலங்களில் தம்மை வருத்தி கல்வி கற்பவர்கள் பரீட்சை முடிந்தபின்பு தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்தவும் தயங்குவதில்லை.  நண்பர்களாக சேர்ந்து படம் பார்க்க செல்லுதல்,  ஐஸ் குடிக்க செல்லுதல் என்று தம் பள்ளி வாழ்க்கையை அனுபவிக்கத்தான் செய்கிறார்கள்.  அந்த வகுப்பில் ஏறக்குறைய எல்லோரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

அவள் நல்ல அழகி, நல்ல புத்திசாலி என்பதற்கும் அப்பால் மிகவும் அன்பானவள் என்பதுதான் உண்மை.  நேர்கொண்ட பார்வையும் தன் எண்ணங்களை நேரிடையாக ஒளிவு மறைவு இன்றி வெளிப்படுத்தும் தன்மையும் கொண்டவள்.

அவன் அவள் நண்பர்களில் ஒருவன்.  அவள் அளவிற்கு அழகன் இல்லை.  படித்த பண்பாடான பெற்றோருக்கு பிள்ளையவன்.   அவனிடம் ஒரு மிதிவண்டி உண்டு.  அவளிடம் இல்லை.  பாடசாலை விட்ட பின்பு மிதிவண்டியை உருட்டிக் கொண்டு அவளுக்கு இணையாக நடந்து வருவான்.

பேச்சு வாக்கில் தன்னிடம் ஒரு பியானோ இருப்பதாகவும் தான் சிறு வயதில் பியானோ கற்றதாகவும் கூறுகிறான்.
அவள் ஒன்றும் இசை மேதை இல்லை.  ஆனாலும் பியானோ இசை கேட்பதற்காக அவன் வீட்டிற்கு வருவதாக கூறுகிறாள்.  அவன் வீட்டிற்கு சென்றதும் அதுவரை தூசி பிடித்திருந்த பியானோவை சுத்தம் செய்து
வாசித்துப் பயிற்சி பெறுகிறான்.  நீண்ட காலமாக கேட்காத பியானோ சத்தம் கேட்பதால் பெற்றோர் ஆச்சரியப் படுகிறார்கள்.  ஏனாயிருக்கும் என்று தம்மை தாமே கேட்டுக்கொள்கிறார்கள்.

பிறிதொரு நாளில் அவன் அறைக்குள் இருந்து பியானோ சத்தம் மட்டும் அல்லாது   பேச்சு குரலும் கேட்கிறது.  பெற்றோருக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை.  அறைக்குள் எட்டிப் பார்க்கிறார்கள்.  அவன் மிக அழகாக பியானோ வசித்துக் கொண்டிருந்தான்.  அவன் அருகில் அவள் இருந்தாள்.  அவளை தங்கப் பதுமை என்று வர்ணிக்க முடியாது.  பதினேழு வயது செல்லக் குழந்தை என்று வேண்டுமானால் வர்ணிக்கலாம்.  ஒளிவீசும் கண்களால் சிரித்துக் கொண்டிருந்தாள்.  ஆடிப்போய் விட்டனர் பெற்றோர்.  இந்தப் பெண்ணுக்குள் என்ன இருக்கிறது.  அழகையும் புத்திசாலித்தனத்தையும் தாண்டி வேறு ஏதோ இருக்கிறதே.  அந்தப் பெண்ணுக்குள் இருந்த ஆளுமை அவர்களை கட்டிப்போடுகிறது.  அவள் ஒரு அப்பாவிக் குழந்தை என்பது அவளை பெற்ற அன்னைக்கு மட்டுமே தெரியும்.

அவள் சென்ற பின்பு  இரவு உணவின் போது மகனிடம்  அவள் பற்றி வினவுகிறார்கள்.  அவளுக்கும் உனக்கும் இடையில் என்ன இருக்கிறது என கேட்கிறார்கள்.  அவனுக்கு பதில் கூற தெரியவில்லை. மறு நாள் பாடசாலையில் அவளிடமே வினவுகின்றான்.  அவளுக்கும் சட்டென்று பதில் கூற தெரியவில்லை.  போதிய கால அவகாசம் எடுத்து தம்மை தாமே சோதனை செய்கிறார்கள்.  இது நட்பு தாண்டிய காதல் உணர்வு என்று இருவருமே அடையாளம் காண்கிறார்கள்.  தம் காதலை உறுதிப்படுத்துகிறார்கள்.

அவள் வீட்டிற்கு வருகிறாள்.  சப்பாத்தை கழற்றிப் போடுகிறாள்.  மேலங்கியை கழற்றிப் போடுகிறாள்.  சற்றுப் பரபரப்பாக காணப்படுகிறாள்.  அவள் அன்னை கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டு தன் மடிகணினியில் எதோ பார்த்துக்கொண்டிருக்கிறார்.  அவள் தாயின் மடி கணிணியை தாயின் அனுமதி இல்லாமலே எடுத்து மடித்து கட்டிலில் வைக்கிறாள்.  தாயின் கால்களின் மேல் மடி கணிணி இருந்த இடத்தில் அமருகின்றாள்.  அன்னைக்கு சற்று வலிக்கத்தான் செய்கிறது.  ஆனாலும் பதினேழு வயது அன்புக் குவியலொன்று மடி மீது ஏறி இருக்கும் போது பெற்றவளுக்கு கசக்கவா செய்யும்.

மடிமீது அமர்ந்தவள் மூச்சு விடாமல் நடந்த அத்தனையையும் தாயிடம் ஒப்புவிக்கிறாள்.  அன்னைக்கு தூக்கிவாரிப் போடுகிறது.  ஜீரணிக்க முடியவில்லை.  ஜீரணித்துதான் ஆகவேண்டும்.  சில வினாடிகளில் அன்னை தன்னைத்தானே சுத்தகரித்துக் கொண்டாள்.

நீங்கள் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் மீறாமல் தான் நான் அவனை தேர்ந்து கொண்டேன் அம்மா
என்றாள்.  அன்னை அப்படி என்னதான் நிபந்தனைகள் விதித்தாள் ?

                                                                                                                                                        (தொடரும் )


Sunday, 19 May 2013

சிறுவர்கள் நண்பர்களினூடாகக் கல்வி கற்கின்றார்கள். தம் திறன்களை வளர்த்துக் கொள்கின்றார்கள்


ஒரு சராசரி மனிதராக எமக்குள்ளே எத்தனையோ திறமைக் குறைவுகளும் பலவீனங்களும் இருக்கும்.  ஆனாலும் எமக்குள்ளே இருக்கும் குறைகள் எம் பிள்ளைகளுக்கு வருவதை நாம் யாருமே விரும்புவது இல்லை. எமக்கு இருக்கும் ஒரு திறனை எம் பிள்ளைகளுக்கு ஊட்டுவதை விட எமக்கு இல்லாத ஒரு திறனை எம் பிள்ளைகளுக்கு ஊட்டுவது மிகவும் சிரமமான காரியம். அதற்க்காக நாம் மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும்.