தோபியாஸ், 9 வயது. பாடசாலை முடிந்தபின் பராமரிப்புக்காக என் வீட்டுக்கு வந்துவிடுவான். பின்பு மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவனின் தந்தை அவனை அழைத்துச் செல்வார்.
அன்று அவன் மதிய உணவு வேளையில் மிகவும் மகிழ்சியாக இருந்தான். வாய் ஏதோ பாடலை முணுமுணுத்தது. அவன் மகிழ்ச்சிக்கான காரணத்தை வினவினேன். மாதாந்தப் பரீட்டையில் கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வாங்கி இருக்கின்றானாம். அதிக மதிப்பெண்கள் வாங்கினால் அப்பா 2 யூரோக்கள் தருவதாக வாக்களித்திருந்தவராம். எனக்கு நன்றாகவே புரிந்தது. அவனது மகிழ்ச்சிக்குக் காரணம் நல்ல மதிபெண்கள் இல்லவே இல்லை. அதற்காகக் கிடைக்கப் போகின்ற 2 யூரோக்கள் தான் காரணம். எது எப்படியோ அவன் நல்ல மதிப்பெண்கள் வாங்கியது எனக்கும் மகிழ்ச்சியே. அவன் அப்பாவும் நிச்சயம் மகிழ்சிஅடைவார்.
அடுத்தநாள் மதிய உணவு வேளையில் அவன் முகத்தை நன்கு உற்றுப் பார்த்தேன். அதில் முதல் நாளைய உற்சாகம் இருக்கவில்லை. சற்றே சலிப்புத்தான் தென்பட்டது. காரணத்தை எனக்கு யூகிக்க முடிந்தாலும் அவனிடமே கேட்டேன். அப்பாவிடம் இப்போது காசு இல்லையாம். சம்பளம் வந்தபின்பு 2 யூரோக்கள் தருகிறாராம். மிகவும் சலிப்புடனும் ஏமாற்றத்துடனும் பதில் வந்தது. தோபியாஸ் அன்று பாடசாலையில் பாடங்களைச் சரிவரக் கவனித்திருப்பான் என்று எனக்குத் தோன்றவில்லை.
உண்மையில் அதிகம் பெற்ரோர் செய்கின்ற தவறுதான் இது. பிள்ளைகளுக்கு வாக்களித்த வெகுமதியை உடனேயே கொடுக்கும் போது அவர்கள் உற்சாக மிகுதியினால் படிப்பிலும் ஏனைய தமது துறைகளிலும் அதிக முயற்சியும் அக்கறையும் எடுப்பார்கள். அவர்களுக்கான வெகுமதியை காலதாமதமாகக் கொடுக்கும் போது எதற்க்காக இந்த வெகுமதி என்பது கூட அவர்களுக்கு மறந்து போய்விடும். படிப்பிலும் ஏனைய தமது துறைகளிலும் ஆர்வமும் குறைந்து போய்விடும்.
சிறுவர் உலகம் தனித்துவமானது. அதை நாம் புரிந்து கொள்ளும் போது அவர்களை நாம் இலகுவாக வழிகாட்ட முடியும்.
உண்மை உண்மை... வெகுமதியோ, சிறிய பாராட்டோ உடனே செயல்படுத்தினால் அதிக பலன் கிடைக்கும்...
ReplyDelete