Thursday, 2 October 2014

உண்மையான ஒரு நிறையுணவானது பல வண்ணங்களைக் கொண்டிருக்கும்

சிறுவர் பராமரிப்பு தொழில் கல்வி என்றாலே அதில் நிச்சயமாக உணவு:- (சத்துணவின் தேவை, சத்துணவு தயாரித்தல், உணவைக் கவர்ச்சிகரமாகப் பரிமாறுதல்) என்று ஒரு பகுதி இருக்கும். அது ஒன்றும் மூளையைக் கசக்கி விளங்கிக்கொள்ள வேண்டிய சிரமமான படிப்பு இல்லை.  ஒரு முறை காதால் கேட்டாலோ அல்லது வாசித்தாலோ விளங்கிக் கொள்ளக் கூடிய விடயம்தான்.  சத்துணவு தயாரிப்பதுகூட  இலகுவானவிடயம்தான்.  ஆனாலும் இதற்குள்கூட ஒரு பிரச்சனை இருக்கிறது.  


தயாரித்த உணவைப் பிள்ளைகள் உண்ணவேண்டுமே.  உலகில் உள்ள அத்தனை பிள்ளைகளும் கடைகளில் தயாரித்த திடீர் உணவுகளைத்தான் பெரிதும் விரும்பி உண்ணுகின்றார்கள்.  என் பிள்ளைகள் கூட அதற்கு விதிவிலக்கு இல்லை.  திடீர் உணவுகளின் பாதகங்கள்  பற்றி அனைவருக்குமே தெரியும்.  அதனால் தான் எனது பி.ள்ளைகளுக்கு  திடீர் உணவுகள் வாங்கிக் கொடுக்கும் போதெல்லாம் மனது மிகவும் வலிக்கும்.

திடீர் உணவுகளைவிட வீட்டில் சமைத்த உணவுகள் ஆயிரம் மடங்கு ஆரோக்கியமானவை.  ஆனாலும் வெளிநாட்டுச் சமையல் என்றால் அதில் தகரங்களில் அல்லது போத்தல்களில் அல்லது பிளாஸ்ரிக்  பைகளில் அடைக்கப் பட்ட  உணவுப் பொருட்கள் நிச்சயம் பங்கெடுக்கும்.  இவற்றைப் பயன்படுத்தி சமையல் செய்யும் போது கூட என் மனது அதிகளவில் மகிழ்ச்சி அடைவது இல்லை.




இன்று என் பிள்ளைகளுக்காகத் தயாரித்த இரவு உணவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தது.  குற்ற உணவு எதுவும் ஏற்படவில்லை.
பிள்ளைகள் விரும்பி உண்கின்றார்கள்.  இதைவிட வேறு என்ன வேண்டும்.  உண்மையான சத்துணவானது பல வண்ணங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.  இந்த இரவு உணவு வண்ணமயமாகத்தானே  இருக்கிறது.  இதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் இதில் உள்ள காய்கறிகளும் பழங்களும்  பத்தே நிமிடங்களுக்கு முன்பாக எனது வீட்டுத் தோட்டத்தில் பறித்தவையாகும்.  இதில் இருக்கும் இறைச்சியை நான் அதிக அளவான பழைய எண்ணையில் பொரித்த்தெடுக்கவில்லை..  சுவையூட்டிகள் சேர்த்து அவியவிட்டபின் மிகச்சிறிய அளவிலான புதிய எண்ணைவிட்டு பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைத்திருந்தேன்.

இப்படிப்பட்ட நல்ல அம்சங்கள் பொருந்திய ஒரு இரவு அல்லது மதிய உணவை நீங்களும் தயாரித்துப் பாருங்கள் தோழிகளே:  ஒரு அற்புதமான மன மகிழ்ச்சியை நிங்களும் அடைவீர்கள்.

No comments:

Post a Comment