Monday 29 September 2014

சிறுவர்கள் பாதுகாப்பான அன்பான சூழலில் விருப்புடன் கல்வி கற்கின்றார்கள்.


இன்று காலை யாசினை (3 வயது )பராமரிப்பது ஒன்றும் பெரிய சிரமமாக இருக்கவில்லை.  இதோ படத்தில் இருக்கும் பேனாவைப்  பகுதி பகுதியாகக் கழற்றுவதும் திரும்பப் பொரு த்துவதுமாக சுமார் ஒன்றரை மணி நேரம் ஒரே இடத்திலேயே இருந்தான்.  எனக்கும் அவன் பின்னே விரட்டிக்கொண்டு ஓடுகின்ற வேலை இல்லாமல் போய்விட்டது.  ஆனாலும் அவன் என்னை எழுந்து வேறு வேலைகள் செய்ய அனுமதிக்கவில்லை.  என்னைத் தன்னருகில் அமர்ந்திருக்கும்படி வலியுறுத்தினான்.   எனது வலது கையை எடுத்து தன்னை அணைத்திருக்கும்படி வைத்துவிட்டு எனது வலது தோளில் ஒய்யாரமாகச் சாய்ந்துகொண்டு தனது ஆராச்சியைத் தொடர்ந்தான்.

அவனது இந்த நவடிக்கையில் இருந்து ஒரு விடயத்தை நான் நன்கு புரிந்து கொண்டேன்.  சிறுவர்கள் பாதுகாப்பான, அன்பான ஒரு சூழல்  கிடைக்கும்போது இரட்டிப்பு மடங்கு அதிகமாகக் கல்வி கற்கின்றார்கள்.
இது ஒன்றும் நானாக ஆராச்சி செய்து கண்டுபிடித்த விடயம் இல்லை.  எனது தொழில் கல்வியின் (சிறுவர் பராமரிப்பு ) போது ஏட்டுக் கல்வியாகக் கற்றது தான்.  ஆனாலும் ஏட்டுக்கல்வியாகக் கற்றதை அனுபவத்தில் காணும்போது  அந்த உண்மை மனதில் ஆழமாக வலியுறுத்தப் படுகின்றது.

சற்றே வளர்ந்த பிள்ளைகளை மிரட்டியும் கண்டிப்புடனும் கல்வி கற்பிக்கும் வழக்கம் இன்னும்கூட எம்மவர் சிலரில் இருக்கத்தான் செய்கின்றது.  மிரட்டலும் கண்டிப்புமாகக் கல்வி கற்பிப்பதை விட அன்பும் அரவணைப்புமாகக் கல்வி கற்பிப்பதே அதிக பலன் கொடுக்கும், என்பதை வலியுறுத்தவே எனது இன்றைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

No comments:

Post a Comment