Tuesday 17 August 2021

மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்லும் பிள்ளைகள்




 

இந்தப் படத்தில் உள்ள அக்காவும் தம்பியும் மகிழ்ச்சியாக உற்சாகமாக பயமில்லாமல் பாடசாலை செல்கிறார்கள்.  அதன் ரகசியம் என்னவாக இருக்கும்.

** அவர்கள் நேர்த்தியான, அளவான,  பொருத்தமான ஆடை அணிந்திருக்கிறார்கள்.  அவர்களின் ஆடைகள் அவர்களின் கல்விக்கோ விளையாட்டிற்கோ இடையூறாக இருப்பதில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலை செல்கிறார்கள். 

** அவர்கள் இருவரும் சுத்தமான ஆடைகள் அணிந்திருக்கிறார்கள்.  அதனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருவதில்லை.  அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள். 

** அவர்கள் அன்றைய நாளுக்கான வீட்டுப் பாடங்கள் முழுவதையும் முடித்து, அன்றைய நாளுக்கு தேவையான கல்வி சாதனங்களையும் தமது புத்தகப் பையில் சீராக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** அவர்கள் நல்ல சத்துக்கள் நிறைந்த காலை உணவு உண்ட பின் பசி இல்லாமல் உற்சாகமாக இருக்கிறார்கள்.
அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலை செல்லும் நேரத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அவர்களை கவலைப்படுத்தும் எதிர்மறையான பேச்சுக்களை பேசாமல், அவர்களை உற்சாகமூட்டும் நேர்மறையான பேச்சுக்களை பேசி வழியனுப்பி வைக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலையில் ஆசிரியர்கள் அவர்களை தடி கொண்டு அடிக்காமல், சிறுமைப் படுத்தும் விதமாக கண்டிக்காமல் அன்புடனும் நட்பு மனப்பான்மையுடனும் கல்வி கற்பிக்கிறார்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

** பாடசாலையில் அவர்களுக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் மனம் விட்டு பேசவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் வாய்ப்புக்கள் இருக்கிறது. அதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்கிறார்கள்.

மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் நிச்சயமாக பாடசாலையில் அதிக அளவில் கல்வி கற்பார்கள். அதுதானே பெற்றோருக்கு வேண்டியது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது மேற்சொன்ன விடயங்களை கருத்திற் கொண்டு அனுப்புங்கள் பெற்றோரே.