Wednesday 22 April 2020

பிள்ளைகளிற்கான சிறிய கதிரை மேசையின் பயன்பாடுகள்

என் சிறுவர் பராமரிப்பு தொழிலில் நான் மிகவும் விரும்பும் பொருட்களில் இந்த கதிரை மேசை யும் ஒன்று.  ஆகச் சிறிய பிள்ளைகளிற்கு இது உகந்தது அல்ல.  இந்தக் கதிரையில் அமரும் போது பிள்ளைகளின் கால்கள் தொங்கிக் கொண்டிருக்காமல்  தரையைத் தொடுமானால் பிள்ளைகள் தாராளமாக இந்த கதிரை மேசையை பயன்படுத்தலாம்.  பெரியவர்களின் உதவியின்றி இருக்கவும் எழும்பவும் முடிவதால் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் இந்தக் கதிரை மேசை பெரிதும் உதவி செய்கிறது.

இந்த கதிரை மேசையை பாவித்து பிள்ளைகள் படங்கள் வரைதல், வீட்டுப்பாடம் செய்தல்,  விளையாடுதல், கைவேலைகள் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.  இது அவர்களிற்கு பொருத்தமான உயரத்தில் இருப்பதால் அவர்கள் செய்யும் வேலைகளை ஆர்வத்துடன் வற்புறுத்தலுக்காக இல்லாமல் தன்னிச்சையாக செய்வார்கள்.  வேலை முடிந்ததும் சுத்தம் செய்யும் பழக்கத்தை பழக்குவதும் எளிதானது.

பிள்ளைகளிற்கு ஓடி ஆடி விளையாடுவது எவ்வளவு அவசியமோ ஒரு இடத்தில் இருந்து வேலை செய்வதும் அவ்வளவு அவசியமானதாகும்.
"எம் பிள்ளைகள் ஒரு இடத்தில் இருப்பதில்லை.  எப்போதும் சுறுசுறுப்பாக ஓடியாடிக்கொண்டே இருப்பார்கள் ", என்று சில பெற்றோர் பெருமையாக சொல்வதுண்டு.  அது தவறான பெருமையாகும்.   பிள்ளைகளுக்கு இருந்து வேலை செய்யவும் பழக்கவேண்டும்.

இந்த மேசை பாரம் குறைவானது.  இலகுவில் தூக்கி வேறு இடங்களில் வைக்கலாம்.  சிறு பிள்ளைகள் எப்போதும் பெரியவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க விரும்புவார்கள்.
 பயமின்றி பாதுகாப்பாக உணரும் வேளைகளில் அவர்கள் கல்வி கற்கும் அளவு அதிகமாகிறது.  அம்மா சமையல் வேலையில் இருக்கும் போது சமையல் அறையில் இந்த மேசையை வைத்தால் பிள்ளைகள் அம்மாவுடன் கூட இருந்து தம் பொழுதை பயனுள்ள வழியில் கழிக்க இது பெரிதும் உதவி செய்யும்.

சுருக்கமாக சொல்வதானால் பிள்ளைகளில் கல்வி , விளையாட்டு ஆர்வத்தை தூண்வும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், நல்ல பழக்கங்களை பழக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த மேசை கதிரை பெருமளவில் உதவி செய்கிறது.