Sunday 21 February 2021

பொறுமையின் எல்லை எதுவரை

 


நான் தவறுகள் செய்பவன்.  சில தவறுகளை தெரிந்தே செய்கிறேன்.  சில தவறுகளை தெரியாமல் செய்கிறேன். புதிதாகவும் தவறுகள் செய்கிறேன்.  செய்த தவறுகளை திரும்ப திரும்பவும் செய்கிறேன். எனக்கு தெரியும் செய்த தவறுகளை, அவை தவறுகள் என்று தெரிந்த பின்பும் திரும்ப திரும்ப செய்யும் போதுதான் உங்களுக்கு என் மீது கோபம் அதிகமாகிறது. 


உங்களுக்கு என்மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும் நான் ஒரு பிள்ளை என்பதை மறந்துவிடாதீர்கள்.  செய்த தவறை திரும்ப திரும்ப செய்வது பிள்ளைக்குணம் தான்.


செய்த தவறிற்கு தண்டனையாக பிள்ளைகளை கை நீட்டி அடித்தல் தவறு என்று விஞ்ஞான ரீதியாக நிரூபணமாயிற்று.  பிள்ளைகளை அடிக்கும் கடும் போக்கில் இருந்து  உலகம்  மீண்டு வருகிறது.


உங்களுக்கு ஒன்று தெரியுமா?  கோலால் அடித்தல் குற்றம் என்றால், கையால் அடித்தல் குற்றம் என்றால் சொல்லால் அடித்தலும் குற்றம் தான்.


என் தவறுகளுக்கான தண்டனைகளாக, அல்லது எச்சரிக்கைகளாக நீங்கள் தருகின்ற சொல்லடிகள் எனக்குள் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக மன நோவுகளையும்  விரக்திகளையும், ஆழுமைச் சிதைவுகளையும் மட்டுமே தரக்கூடியன.


கடுமையான சொல்லாடல்களை விட அன்பான நட்பான புத்திமதி அல்லது நினைவுறுத்தல்கள் அதிக பலன்களை தரக்கூடியன.  சிறுவர்களாகிய எம் தன்னம்பிக்கையையும் சுயகௌரத்தையும் அவை பாதிப்பதில்லை.  மாறாக வளர்த்துவிடுவதுடன்  எது சரி எது பிழை என்று பகுத்தறியும் திறனையும் தருகின்றன. 



இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம்.  எத்தனை தரம் தான் மன்னிப்பது.  எத்தனை தரம் தான் கோபத்தை அடக்குவது.   திரும்ப திரும்ப அதே தவறை செய்கின்ற பிள்ளையை எத்தனை தரம் தான் பொறுத்துக்கொள்வது.  பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா என்று உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லப் போகிறீர்கள். 


செல்லாது செல்லாது உங்கள் நியாயம் செல்லாது.  எத்தனை தரம் தான் என்ற உங்கள் கேள்விக்கான பதில் இதோ.

நாங்கள் திருந்தி முடிக்கும் வரை. பெரியோர்களாகிய உங்களுக்கு பொறுமை மிக முக்கியம்.  பொறுமையும் நட்புணர்வும் சேர்ந்த அணுகுமுறை மட்டுமே சிறுவர்களாகிய எங்களை வழிநடத்தும் சிறந்த கருவியாகும். 

1 comment: