siruvar ulagam
சிறுவர் உலகம் தனித்துவமானது. அதை நாம் புரிந்து கொள்ளும் போது அவர்களுக்கு இலகுவாக வழிகாட்ட முடியும்.
Tuesday 17 August 2021
மகிழ்ச்சியுடன் பாடசாலை செல்லும் பிள்ளைகள்
Sunday 21 February 2021
பொறுமையின் எல்லை எதுவரை
நான் தவறுகள் செய்பவன். சில தவறுகளை தெரிந்தே செய்கிறேன். சில தவறுகளை தெரியாமல் செய்கிறேன். புதிதாகவும் தவறுகள் செய்கிறேன். செய்த தவறுகளை திரும்ப திரும்பவும் செய்கிறேன். எனக்கு தெரியும் செய்த தவறுகளை, அவை தவறுகள் என்று தெரிந்த பின்பும் திரும்ப திரும்ப செய்யும் போதுதான் உங்களுக்கு என் மீது கோபம் அதிகமாகிறது.
உங்களுக்கு என்மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும் நான் ஒரு பிள்ளை என்பதை மறந்துவிடாதீர்கள். செய்த தவறை திரும்ப திரும்ப செய்வது பிள்ளைக்குணம் தான்.
செய்த தவறிற்கு தண்டனையாக பிள்ளைகளை கை நீட்டி அடித்தல் தவறு என்று விஞ்ஞான ரீதியாக நிரூபணமாயிற்று. பிள்ளைகளை அடிக்கும் கடும் போக்கில் இருந்து உலகம் மீண்டு வருகிறது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? கோலால் அடித்தல் குற்றம் என்றால், கையால் அடித்தல் குற்றம் என்றால் சொல்லால் அடித்தலும் குற்றம் தான்.
என் தவறுகளுக்கான தண்டனைகளாக, அல்லது எச்சரிக்கைகளாக நீங்கள் தருகின்ற சொல்லடிகள் எனக்குள் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக மன நோவுகளையும் விரக்திகளையும், ஆழுமைச் சிதைவுகளையும் மட்டுமே தரக்கூடியன.
கடுமையான சொல்லாடல்களை விட அன்பான நட்பான புத்திமதி அல்லது நினைவுறுத்தல்கள் அதிக பலன்களை தரக்கூடியன. சிறுவர்களாகிய எம் தன்னம்பிக்கையையும் சுயகௌரத்தையும் அவை பாதிப்பதில்லை. மாறாக வளர்த்துவிடுவதுடன் எது சரி எது பிழை என்று பகுத்தறியும் திறனையும் தருகின்றன.
இப்போ உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். எத்தனை தரம் தான் மன்னிப்பது. எத்தனை தரம் தான் கோபத்தை அடக்குவது. திரும்ப திரும்ப அதே தவறை செய்கின்ற பிள்ளையை எத்தனை தரம் தான் பொறுத்துக்கொள்வது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா என்று உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லப் போகிறீர்கள்.
செல்லாது செல்லாது உங்கள் நியாயம் செல்லாது. எத்தனை தரம் தான் என்ற உங்கள் கேள்விக்கான பதில் இதோ.
நாங்கள் திருந்தி முடிக்கும் வரை. பெரியோர்களாகிய உங்களுக்கு பொறுமை மிக முக்கியம். பொறுமையும் நட்புணர்வும் சேர்ந்த அணுகுமுறை மட்டுமே சிறுவர்களாகிய எங்களை வழிநடத்தும் சிறந்த கருவியாகும்.
Wednesday 22 April 2020
பிள்ளைகளிற்கான சிறிய கதிரை மேசையின் பயன்பாடுகள்
இந்த கதிரை மேசையை பாவித்து பிள்ளைகள் படங்கள் வரைதல், வீட்டுப்பாடம் செய்தல், விளையாடுதல், கைவேலைகள் செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். இது அவர்களிற்கு பொருத்தமான உயரத்தில் இருப்பதால் அவர்கள் செய்யும் வேலைகளை ஆர்வத்துடன் வற்புறுத்தலுக்காக இல்லாமல் தன்னிச்சையாக செய்வார்கள். வேலை முடிந்ததும் சுத்தம் செய்யும் பழக்கத்தை பழக்குவதும் எளிதானது.
பிள்ளைகளிற்கு ஓடி ஆடி விளையாடுவது எவ்வளவு அவசியமோ ஒரு இடத்தில் இருந்து வேலை செய்வதும் அவ்வளவு அவசியமானதாகும்.
"எம் பிள்ளைகள் ஒரு இடத்தில் இருப்பதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக ஓடியாடிக்கொண்டே இருப்பார்கள் ", என்று சில பெற்றோர் பெருமையாக சொல்வதுண்டு. அது தவறான பெருமையாகும். பிள்ளைகளுக்கு இருந்து வேலை செய்யவும் பழக்கவேண்டும்.
இந்த மேசை பாரம் குறைவானது. இலகுவில் தூக்கி வேறு இடங்களில் வைக்கலாம். சிறு பிள்ளைகள் எப்போதும் பெரியவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க விரும்புவார்கள்.
பயமின்றி பாதுகாப்பாக உணரும் வேளைகளில் அவர்கள் கல்வி கற்கும் அளவு அதிகமாகிறது. அம்மா சமையல் வேலையில் இருக்கும் போது சமையல் அறையில் இந்த மேசையை வைத்தால் பிள்ளைகள் அம்மாவுடன் கூட இருந்து தம் பொழுதை பயனுள்ள வழியில் கழிக்க இது பெரிதும் உதவி செய்யும்.
சுருக்கமாக சொல்வதானால் பிள்ளைகளில் கல்வி , விளையாட்டு ஆர்வத்தை தூண்வும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், நல்ல பழக்கங்களை பழக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த மேசை கதிரை பெருமளவில் உதவி செய்கிறது.
Tuesday 7 November 2017
பள்ளிக் காதல்
அவள் நல்ல அழகி, நல்ல புத்திசாலி என்பதற்கும் அப்பால் மிகவும் அன்பானவள் என்பதுதான் உண்மை. நேர்கொண்ட பார்வையும் தன் எண்ணங்களை நேரிடையாக ஒளிவு மறைவு இன்றி வெளிப்படுத்தும் தன்மையும் கொண்டவள்.
அவன் அவள் நண்பர்களில் ஒருவன். அவள் அளவிற்கு அழகன் இல்லை. படித்த பண்பாடான பெற்றோருக்கு பிள்ளையவன். அவனிடம் ஒரு மிதிவண்டி உண்டு. அவளிடம் இல்லை. பாடசாலை விட்ட பின்பு மிதிவண்டியை உருட்டிக் கொண்டு அவளுக்கு இணையாக நடந்து வருவான்.
பேச்சு வாக்கில் தன்னிடம் ஒரு பியானோ இருப்பதாகவும் தான் சிறு வயதில் பியானோ கற்றதாகவும் கூறுகிறான்.
அவள் ஒன்றும் இசை மேதை இல்லை. ஆனாலும் பியானோ இசை கேட்பதற்காக அவன் வீட்டிற்கு வருவதாக கூறுகிறாள். அவன் வீட்டிற்கு சென்றதும் அதுவரை தூசி பிடித்திருந்த பியானோவை சுத்தம் செய்து
வாசித்துப் பயிற்சி பெறுகிறான். நீண்ட காலமாக கேட்காத பியானோ சத்தம் கேட்பதால் பெற்றோர் ஆச்சரியப் படுகிறார்கள். ஏனாயிருக்கும் என்று தம்மை தாமே கேட்டுக்கொள்கிறார்கள்.
பிறிதொரு நாளில் அவன் அறைக்குள் இருந்து பியானோ சத்தம் மட்டும் அல்லாது பேச்சு குரலும் கேட்கிறது. பெற்றோருக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை. அறைக்குள் எட்டிப் பார்க்கிறார்கள். அவன் மிக அழகாக பியானோ வசித்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் அவள் இருந்தாள். அவளை தங்கப் பதுமை என்று வர்ணிக்க முடியாது. பதினேழு வயது செல்லக் குழந்தை என்று வேண்டுமானால் வர்ணிக்கலாம். ஒளிவீசும் கண்களால் சிரித்துக் கொண்டிருந்தாள். ஆடிப்போய் விட்டனர் பெற்றோர். இந்தப் பெண்ணுக்குள் என்ன இருக்கிறது. அழகையும் புத்திசாலித்தனத்தையும் தாண்டி வேறு ஏதோ இருக்கிறதே. அந்தப் பெண்ணுக்குள் இருந்த ஆளுமை அவர்களை கட்டிப்போடுகிறது. அவள் ஒரு அப்பாவிக் குழந்தை என்பது அவளை பெற்ற அன்னைக்கு மட்டுமே தெரியும்.
அவள் சென்ற பின்பு இரவு உணவின் போது மகனிடம் அவள் பற்றி வினவுகிறார்கள். அவளுக்கும் உனக்கும் இடையில் என்ன இருக்கிறது என கேட்கிறார்கள். அவனுக்கு பதில் கூற தெரியவில்லை. மறு நாள் பாடசாலையில் அவளிடமே வினவுகின்றான். அவளுக்கும் சட்டென்று பதில் கூற தெரியவில்லை. போதிய கால அவகாசம் எடுத்து தம்மை தாமே சோதனை செய்கிறார்கள். இது நட்பு தாண்டிய காதல் உணர்வு என்று இருவருமே அடையாளம் காண்கிறார்கள். தம் காதலை உறுதிப்படுத்துகிறார்கள்.
அவள் வீட்டிற்கு வருகிறாள். சப்பாத்தை கழற்றிப் போடுகிறாள். மேலங்கியை கழற்றிப் போடுகிறாள். சற்றுப் பரபரப்பாக காணப்படுகிறாள். அவள் அன்னை கட்டிலில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டு தன் மடிகணினியில் எதோ பார்த்துக்கொண்டிருக்கிறார். அவள் தாயின் மடி கணிணியை தாயின் அனுமதி இல்லாமலே எடுத்து மடித்து கட்டிலில் வைக்கிறாள். தாயின் கால்களின் மேல் மடி கணிணி இருந்த இடத்தில் அமருகின்றாள். அன்னைக்கு சற்று வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பதினேழு வயது அன்புக் குவியலொன்று மடி மீது ஏறி இருக்கும் போது பெற்றவளுக்கு கசக்கவா செய்யும்.
மடிமீது அமர்ந்தவள் மூச்சு விடாமல் நடந்த அத்தனையையும் தாயிடம் ஒப்புவிக்கிறாள். அன்னைக்கு தூக்கிவாரிப் போடுகிறது. ஜீரணிக்க முடியவில்லை. ஜீரணித்துதான் ஆகவேண்டும். சில வினாடிகளில் அன்னை தன்னைத்தானே சுத்தகரித்துக் கொண்டாள்.
நீங்கள் விதித்த அத்தனை நிபந்தனைகளையும் மீறாமல் தான் நான் அவனை தேர்ந்து கொண்டேன் அம்மா
என்றாள். அன்னை அப்படி என்னதான் நிபந்தனைகள் விதித்தாள் ?
(தொடரும் )
Thursday 17 August 2017
மனத்துக்குப் பிடித்த சூழல் சிறுவர்களில் நன்னடத்தைகளை வளர்க்கும்
பிள்ளைகள் 3 பேருடன் விளையாட்டுத் திடலுக்கு விரைகின்றேன். விளையாட்டுத்திடலுக்கு செல்வது எந்தப் பிள்ளைக்குத்தான் பிடிக்காது. அந்த மகிழ்ச்சியில் சண்டைகள் சற்றுக் குறையத்தொடங்குகின்றன. இப்போது தான் ஆரம்பிக்கிறது ஆச்சரியம். ஆரம்பத்தில் சேர்ந்து விளையாட பின்தங்கிய பிள்ளைகள் தம்மை மறந்து சேர்ந்து விளையாடுகிறார்கள். விளையாட்டின் பொது பல கதைகள் பேசுகின்றார்கள். அந்த உரையாடல்களில் நட்பு தலை தூக்குகிறது. சண்டைகள் மறைந்துபோகின்றன. பிள்ளைகள் 3 பெரும் சீரான நடத்தைகளைக் காட்டுகின்றாகள்.
விளையாட்டுத் திடலில் இருந்து வீடு திரும்பும் போதும் , பின்பு வீட்டிலும் இந்த சமாதான உணர்வு நீடிக்கிறது. எனக்கு மனதினுள் பொறி தட்டுகிறது. பிள்ளைகளிற்கு பிடித்த ஆரோக்கியமான வெளிப்புறச் சூழலை கொடுக்கும் போது அவர்களில் சீரான நடத்தைகள் தூண்டப்படுகிறது. அது விளையாட்டுத் திடலாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அதுபோன்ற இடங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்தத் தத்துவம் பிள்ளைகளிற்கு மட்டும் அல்ல பெரியவர்களும்மும் பொருந்தும்.
Wednesday 16 August 2017
சமைத்த உணவும் சமைக்காத உணவும்
அடுப்பில் வைத்து சமைத்த உணவை விட சமைக்காத உணவுகளில் சத்து அதிகம் என்று எங்கோ படித்திருக்கிறேன். படித்தவுடன் விளங்கிவிட்டது. விளங்கியவுடன் பிடித்துவிட்டது. அதன்பின்பு எப்போதும் நான் அதற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன். தாயகத்தில் கிராமத்தில் வாழ்ந்தவரை சமைக்காத இயற்கை உணவுகள் நாளாந்த வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தவை. அந்தக் காலங்களில் அவற்றின் மதிப்புப் பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை. நகர வாழ்க்கைதான் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது.
சமைக்காத உணவுகளின் பெறுமதி பற்றிய பூரண புரிந்துணர்வு வந்தபின் இப்போதெல்லாம் என் நாளாந்த வாழ்க்கையில் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்து, துண்டு துண்டாக நறுக்கி சாப்பிட்டு மேசையில் அழகாக வைத்துவிடுகிறேன். அழகாக பல வண்ணங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற இயற்கை உணவுகளை பார்த்த மாத்திரத்திலேயே பிள்ளைகளிற்கு உணவு விருப்பு ஏற்பட்டுவிடுகிறது. மேசையடியில் இருந்து நல்ல தாராளமாக எடுத்து சாப்பிட தொடங்கி விடுகிறார்கள். fast food இற்கு வயிற்றில் இடமில்லாமல் போகிறது. பிள்ளைகள் என்னதான் fast food விரும்பிகளாக இருந்தாலும் வளர்ந்த பிள்ளைகளிற்கு அவைபற்றிய விழிப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. தவறு என்று தெரிந்தும் அவற்றை உண்ணும் போது அவர்களுக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது. நான் என் சாப்பாட்டு மேசையை சமைக்கப்படாத இயற்கை உணவுகளால் நிரப்பும் போது என் 14 வயது மகன் சமையலறையில் வைத்து என்னைக் கட்டி அனைத்து முத்தமிடுகிறார். ஆக என் சாப்பிட்டு மேசை எனக்கும் என் பிள்ளைகளிற்கு நல்ல அன்புறவையும் புரிதலையும் ஏற்படுத்தி தருகிறது.
Sunday 13 March 2016
சுதந்திரக் கற்றல்
அப்போது எனக்கு நான்கு வயது. அது ஒரு அழகிய இலையுதிர்காலம். மாலை நான்கு மணி வாக்கில் என் அம்மா என்னைப் பாலர் பாடசாலையிலிருந்து கூட்டிச் செல்ல வந்திருந்தார். வீதி முழுவதும் ஒரே காய்ந்த சருகுகளும் விதைகளும் கொட்டிக் கிடந்தன. அவற்றைப் பார்த்தபோது எனக்கு அவற்றுடன் விளையாட விருப்பமாக இருந்தது. நான் சற்று விளையாடலாமா என அம்மாவிடம் கேட்டேன். அம்மா சம்மதம் தெரிவித்தார். எனக்காகப் பொறுமையுடன் காவல் இருந்தார். என்னுடன் சேர்ந்து விளையாடினார். என்ன கேவிகளுக்கு எலாம் பொறுமையுடன் பதில் சொன்னார்.
எனக்கு அங்கு கண்ட இலைகள், காய்ந்த விதைகள், தடிகள் சிலவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆவலாக இருந்த்தது. அம்மாவிடம் அதுபற்றிக் கூறினேன். அம்மா உடனே தயாராக வைத்திருந்த ஒரு சிறு பையை என்னிடம் தந்தார். நான் அப்பையினுள் எனக்கு விருப்பமான பொருட்கள் சிலவற்றைச் சேகரித்தேன். சிறிது நேரம் கழித்து இருவரும் வீடு திரும்பினோம். கை கழுவிவிட்டு உணவு உண்டேன்.
என்னைச் சுதந்திரமான ஒரு விளையாடுச் சூழலில் நான் விரும்பும் கல்வியைக் கற்க ஊக்கமும் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் தந்த அம்மாவிற்கு நன்றி.
Wednesday 25 March 2015
பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்து பள்ளிக்கு அனுப்பும்போது பிள்ளைகள் பள்ளியில் பூரணமாகத் தொழிற்படுவார்கள்
பரவலாக எம்மவர் மத்தியில் காலை எழுந்தவுடன் பல் துலக்குகின்ற பழக்கம் தான் இருக்கின்றது. அனால் காலையுணவு முடிந்தபின்பு பல் துலக்குவதுதான் மேலைநாடுகளில் பல்வைத்தியர்களால் பரிந்துரக்கப்படுகின்றது. இரவு படுக்கைக்குச் செல்ல முன்பு பல் துலக்குவது கட்டாயமானது. அதன்பின்பு இரவு நித்திரையில் பல்லைக் கிருமிகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை.இதனால் காலை எழுந்தவுடன் பல் துலக்க வேண்டிய அவசியம் இல்லை. காலையுணவு முடிந்தபின்புதான் பல்லிடுக்குகளில் புகுந்துள்ள உணவுத்துணிக்கைகளை அகற்றுவதற்காகப் பல்துலக்க வேண்டும்.
இந்தக்கதையில் வருகின்ற அப்பா காலையுணவு அருந்துதல், பல்துலக்குதல் போன்ற செயற்பாடுகளைப் பிள்ளையுடன் சேர்ந்து செய்வதால் பிள்ளைக்கு நல்ல ஆரோக்கியமான முன்மாதிரிகையாக இடுக்கின்றார். எம் பிள்ளைகளிற்கு நாம் எதாவது கற்பிக்க விரும்பினால் அதன் முதலாவது கட்டம் நல்ல முன்மாதிரிகையாகத் இருப்பதுதான்.
மேலும் இந்த அப்பா ' நேரம் போச்சு, நேரம் போச்சு' என்று பிள்ளையை நச்சரிக்கவில்லை. அவசரப்படுத்தவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் பிள்ளையிடம் சுடு சொல் பாவிக்கவில்லை. அன்பையும் அரவணப்பையும் எந்தசந்தர்ப்பத்திலும் கைவிடவில்லை. பாடசாலையில் அவர் பிள்ளையை ஒப்படைக்கும்போது பிள்ளைக்கு வயிறும் மனமும் நிறைந்து இருக்கின்றன. இந்தப் பிள்ளை தன முழுத்திறமையையும் பயன்படுத்தி பாடசாலையில் கல்வி கற்காமலா போகும்.
எல்லா அப்பாக்களுக்கும் காலை 10 மணிக்குத்தான் வேலை ஆரம்பிக்கும் என்று சொல்ல முடியாது. அனாலும் அவரவர் குடும்பச் சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடுதலும் உதவி தேவைப் படுமிடத்து உதவிபெறுதலும் தான் முக்கியம்.
Monday 16 March 2015
விரக்தியடைந்த பிள்ளை தவறான நடத்தையைக் காட்டத்தான் செய்யும்
தம்முடைய முயற்சியொன்றிலே தோற்றுப்போதல் அவர்களுக்குளே ஒருபோதும் சுய மதிப்பை (self -esteem ) வளர்க்கப்போவதில்லை. மாறாக தாழ்வு மனப்பான்மையே வளர்த்துவிடும்.
எனவே பிள்ளை வழிகாட்டுதலைக் கடமையாகக் கொண்ட பெரியவர்கள், பிள்ளைகளை நன்கு அவதானித்து அவர்கள் விரக்தி நிலையை அடைய முன்பே அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை வெற்றியாக முடிக்கச் செய்ய வேண்டும்.
இங்கு நான் முக்கியமாக வலியுறுத்துவது பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் செய்யவேண்டிய உதவியைத்தான். இந்த உதவியானது பிள்ளைகள் முயற்சியின்றி இருக்கும்போது செய்யக்கூடாது. அது அவர்களில் சோம்பேறித்தனத்தைத்தான் வளர்க்கும்.
மாலதி (4 வயது) உருட்டுக்கட்டையால் மாவுருண்டையை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் நினைத்ததுபோல அவளால் மாவுருண்டையை உருட்ட முடியவில்லை. நீண்ட நேர முயற்சிக்குப் பின் அவள் மிகவும் களைப்பும் விரக்தியும் அடைந்தாள். கோபத்துடன் உருட்டுக்கட்டையை எறிந்துவிட்டு சத்தமிட்டு அழத் தொடங்கினாள். இச்சந்தர்ப்பத்தில்
பின்வருவனவற்றில் பெரியவர் ஒருவரின் சரியான வழிகாட்டும் நடத்தை யாது?
1. "மாலதி உடனடியாக உருட்டுக்கட்டையை எடுத்து வை", என்று அதிகாரத்தொனியில் கத்திப் பேசுதல்.
2. எதுவுமே விளங்காததுபோல அலட்சியமாக இருத்தல்
3. நல்ல பிள்ளைகள் இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்கள், நல்ல பிள்ளையாக மீண்டுமொருமுறை முயற்சிசெய்யும்படி புத்தி சொல்லுதல்.
4. உருட்டுக்கட்டையை எடுத்து மாலதியை மடியில் இருத்தி அவளை ஆறுதல்படுத்தி அவளுடைய கைகளுக்கு மேலாக தம்முடைய கைகளை வைத்து அவள் விரும்பும் வடிவத்தைச் செய்து முடிக்க உதவி செய்தல்.
சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான்காவது விடைதான் சரியானது. சரியான நேரத்தில் கிடைத்த அளவான உதவியானது மாலதிக்குள் தாழ்வு மனப்பான்மையை அல்லாது நல்ல சுய மதிப்பை வளர்த்து விட்டிருக்கும்.
Wednesday 28 January 2015
குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை வாயில் போட்டுச் சுவைப்பதன் மூலம் கல்வி கற்கின்றார்கள்.
குழந்தைகள் தம் கையில் எந்தப பொருள் அகப்பட்டாலும் அதை வாயில் போட்டு சுவைக்க ஆரம்பித்து விடுவார்கள். இது மிகவும் இயற்கையான ஒரு தொழிற்பாடாகும். உண்மையில் இது ஒரு கற்றற் செயற்பாடாகும். ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தம் ஐந்து புலன்களினூடாகவும் தான் கல்வி கற்கின்றார்கள். எம் ஐந்து புலன்களில் சுவை கூட ஒன்றுதானே. குழந்தைகள் தம் சுவையுணர்வைப் பயன்படுத்திக் கல்வி கற்கும் நோக்கில்தான் தாம் காணும் பொருட்களையெல்லாம் வாயில் போடுகின்றார்கள்.
Sunday 11 January 2015
பிள்ளைகளின் சீரான நித்திரையில் அப்பாக்களுக்கும் பங்குண்டு
அம்மாக்கள் சிறு பிள்ளைகளை சாதுரியமாக உரிய நேரத்தில் நித்திரைக்குச் செலுத்தினாலும் அப்பாக்களின் புரிந்து கொள்ளாமையினால் அதிக வீடுகளில் இது பிரச்சினையாகி விடுகின்றது. இது அதிக அம்மாக்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டுத்தான்.
அப்பாக்கள் வீட்டில் இருக்கும்போது மிக மகிழ்ச்சியாக இருந்தால் மிகவும் சத்தமாகவும் ஆரவாரமாகவும் இருப்பார்கள். பிள்ளைகளின் நித்திரை நேரம் கடந்தாலும் அதுபற்றி அக்கறை இல்லாமல் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
அப்பாக்கள் இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு பிள்ளைகளின் சீரான நித்திரைக்குத் தமது பங்களிப்பையும் வளங்கவேண்டும். அதற்கு முதல் கட்டமாக குழந்தைகள் இரவு எட்டுமணிக்கு சத்தம் சந்தடியற்ற கண்ணையுறுத்தும் விளக்குகள் இல்லாத கதகதப்பான சுத்தமான படுக்கையில் படுக்கைக்குச் செல்லவேண்டும் என்ற உண்மையை அப்பாக்களும் உணரவேண்டும்.
பிள்ளைகளைக் காலையில் துயில் எழுப்புவது சிரமமான விடயமா?
Sunday 28 December 2014
பிள்ளை வளர்ப்பும் சமையலறையும்
சமையலறையானது நிச்சயமாக உணவு தயாரிப்பதற்கான ஒரு இடமாகும். அதேவேளையில் அது பிள்ளைகளின் கற்றலுக்கும் பெற்றோர்-பிள்ளைகள் தொடர்பாடலுக்குமான ஒரு இடமாகும். அதுமட்டுமல்லாது அது வாழ்வின் மிக இனிமையான நினைவுகளைத் தரக்கூடிய ஒரு இடமுமாகும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குச் சொந்தமான பிரச்சினைகளும் இறுக்கங்களும் இருக்கும். சமையல் வேலை கூட சிரமம் நிறைந்ததாகவும் சலிப்பு நிறைந்ததாகவும் இருக்கக்கூடும்.ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து சமைக்கும்போது அது இனிமையான நினைவுகளைத் தரக்கூடிய இலகுவான வேலையாக மாறக்கூடும்,
சமையல் வேலையை இலகுவானதாகவும் கற்றல் செயற்பாடுகள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கான துணுக்குகள் சில:
1. அன்றைய சமையலுக்கான உணவு திட்டமிடும்போது பிள்ளைகளின் ஆலோசனைகளையும் கேளுங்கள். பிள்ளைகளுக்கு பல்வேறுபட்ட சத்துக்களையும் அவைகொண்டுள்ள உணவு வகைகளையும் கற்பிப்பதற்கு இது பெரிதளவில் உதிவி செய்யும். உணவு வல்லுனர்களால் அங்கிகரிக்கப்பட்ட மாதிரி உணவு திட்டமிடல் கீழே உள்ளது. பிள்ளைகள் உணவு திட்டமிட அலோசனைகள் வளங்கும் போது இந்த அமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த அட்டவணையானது உங்கள் சமையலறையை அலங்கரிப்பதாக இருக்கலாம்
2. சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் போது பிள்ளைகளையும் அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுது அவர்களுக்கு சத்துணவு தொடர்பான அறிவு வளர்வதுடன் அவற்றின் விலை தொடர்பான விபரமும் தெரிய வருகின்றது.
3. அடுத்ததாகச் சமையல் வேலையில் கூட பிள்ளைகளின் உதவியை நாடுங்கள். பிள்ளைகளுக்குச் சுத்தம் பற்றிய கருத்துக்களைச் சொல்லக்கூடிய நேரம் அதுவே. " தக்காளியை வெட்டுமுன்பு உன் கைகளை நன்கு கழுவு. அல்லாதுவிடில் உன் கைகளுள் உள்ள கிருமி உணவுப் பொருட்களுடன் கலந்துவிடும்.' போன்ற அறிவுரைகள் அதிக நன்மை பயப்பன.
4. சமையல் முடிந்த பின்பு சாப்பாட்டு மேசையை அலங்கரிப்பதிலும் பிள்ளைகள் உதவி செய்ய இடமளியுங்கள்.. அவர்களின் கற்பனைத்திறனுக்கும் இடமளியுங்கள். அவர்கள் தவறுகள் செய்யும் போது மிருதுவாகத் திருத்துங்கள்.
5. குடும்பமாகச் சேர்ந்து உணவு அருந்துங்கள். உணவு வேளை மிக ரம்மியமானதாக இருக்க வேண்டும். இவ்வேளையில் பிள்ளைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். நேர்முகமான( positive)உரையாடலுக்கு இடம் கொடுங்கள்.
6. இப்போது மிக முக்கியமான கட்டம். சாப்பாட்டு மேசையையும் சமையலறையும் சுத்தம் செய்வது. இதில் கூட பிள்ளைகளின் உதவியை அனுமதியுங்கள். பிள்ளைகள் தமக்கு விருப்பமான இசையைக் கேட்டபடியே சுத்தம் செய்ய அனுமதி தாருங்கள்.
சமையலறையும் சமையலும் சுத்தம் செய்தலும் அம்மாவின் வேலை என்ற மனப்பான்மையை அழித்து அது ஒரு குடும்ப வேலை என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துங்கள். பிள்ளைகள் மட்டுமல்லாது அப்பாக்கள் கூட ஒரு கை கொடுக்க வேண்டும்.
நீங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெற்றோர்?
வகை 1. அதிக கண்டிப்பு உள்ள பெற்றோர்கள் too strict parents
ண்டே இருப்பார்கள். பிள்ளைகள் மறு பேச்சின்றி அவர்களுக்குக் கீழ்ப்படிந்தேயாக வேண்டும். அல்லாவிடில் அவர்களுக்கு பெரிய அளவில் தண்டனைகள் வழங்கப்படும். இவர்களின் பிள்ளைகள் எப்போதும் மகிழ்சியற்றவர்களாகவே காணப்படுவார்கள். இவ்வகையான பெற்றொர்கள் தம்முடைய வழி சரியானது எனப் பெரிதும் நம்புகின்றார்கள். பெற்றோருக்கான தமது அறிவையும் திறனையும் விருத்திசெய்ய அவர்கள் முயற்சி செய்வதேயில்லை.
வகை 2 : கண்டிப்பு இல்லாத பெற்றோர் too kind parents
இவர்கள் தங்கள் பிள்ளைகளின் குற்றங்களையும் குறைகளையும் இலகுவாக மன்னிக்கின்றார்கள். பிள்ளைகளின் வேலைகளையும் தாங்களே செய்கின்றார்கள் . பிள்ளைகள் தம்முடைய சுயௌதவித் திறன்களை வளர்ப்பதற்கு இடமளிப்பதேயில்லை. இங்கு பிள்ளைகள் தண்டிக்கப்படுவதே இல்லை. பிள்ளைகள் மிகவும் மகிழ்சியுடன் இருப்பார்கள். ஆனாலும் பிள்ளைகளுக்கு தம்முடைய தவறுகளின் கனாகனம் புரிவதேயில்லை.
வகை 3 : அளவான கண்டிப்பும் அரவணைப்பும் உள்ள பெற்றோர் moderate parents
இவர்கள் பிள்ளைகலின் குழப்பமான வேளைகளில் அல்லது நோய் வேளைகளில் அரவணைக்கின்றார்கள். பிள்ளைகளின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்கின்றார்கள். பிள்ளைகளுடன் நண்பர்கள்போலப் பழகுகின்றார்கள். பிள்ளைகள் தம்முடைய வேலைகளைச் செய்ய ஊக்கப்படுத்துகின்றார்கள். ஆனாலும் பிள்ளைகளுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக உதவி செய்கின்றார்கள். பிள்ளைகளின் தவறுகளை சரியான முறையில் சுட்டிக் காட்டுகின்றார்கள். சிறிய சிறிய வீட்டு விதிகளை அமைத்து தாமும் அதைப் பின்பற்றுகின்றார்கள். தமக்கான பெர்ரூருக்குரிய திறமைகளை வளர்ப்பதில் முனைப்புக் காட்டுகின்றார்கள்.
வகை 4 : செயலற்ற பெற்றோர்கள் passive parents
வேலைநிமித்தமாக தம்முடைய பிள்ளைகளுக்காக ஒரு துளி நேரம்தானும் ஒதுக்கமுடியாதவர்கள், கடுமையான உடல்உள நோய்வாய்ப்பட்டவர்கள், அதிகளவில் மது, போதைவஸ்து என்பவற்றிற்கு அடிமையானவர்கள் இவ்வகையில் அடங்குவர். இவர்களின் பிள்ளளகள் இவர்களிடம் வழர்வதைவிட பொருத்தமான பிற உறவினர்களிடம் அல்லது தொண்டு நிறுவனங்களிடம் வசர்வது சிறந்ததாகும்.
Thursday 25 December 2014
பிள்ளைகள் தன்னிச்சையாக ஆராச்சி செய்து கற்றலைப் பெரிதும் விரும்புகின்றார்கள்
Sunday 2 November 2014
அன்பான உதவிகள் நிறைந்த அருகாமையானது பிள்ளைகளின் கல்வியை இலகுவாக்கும்
தொடர்ச்சியான தோல்வி அவனை விரக்தியடைய வைக்கின்றது. கட்டைகளை சுழற்றி எறிந்துவிட்டு சத்தமிட்டு அழுகின்றான். இந்த சந்தர்ப்பத்தில் பின்வருவனவற்றில் சரியான அணுகுமுறை எது?
1. " இது என்ன பழக்கம். உடனே எழுந்து கட்டைகளை ஒழுங்காக வை " என்று கண்டிப்புடன் கூறுவது.
2. "மீண்டும் ஒரு முறை முயற்சி செய். உன்னால் முடியும் " என்று ஊக்கப்படுத்துவது.
3. " சிதறிய கட்டைகளை மீண்டும் ஒழுங்காக்கி அவன் எதிர்பார்த்தபடி கட்டி முடித்துக் கொடுப்பது.
4. விளையாடிக்கொண்டிருக்கும் அவனை நன்கு அவதானித்து அவன் விரக்தியும் கோபமும் அடைய முன்னதாகவே அவனுக்கு வேண்டிய உதவியைச் சிறிதளவாகச் செய்து அவன் விளையாட்டைத் தொடர ஊக்கப்படுத்துவது.
சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான்காவது விடையே சரியானது.
சிறு பிள்ளைகள் விளையாட்டின் மூலம் தான் கல்வி கற்கின்றார்கள். அதற்கென்றே வடிவமைக்கப் பட்ட விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும் போது அவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கின்றது. அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்கள் விரக்தியும் கோபமும் அடைந்து விளையாட்டுப் பொருட்களைப் போட்டடித்து சத்தமிட்டு அழும் நிலையும் ஏற்ப்படுகின்றது. இதனால் அந்தப்பொழுது பயனற்றதாகிப் போவதுடன் பிள்ளைகள் கல்வி கற்கும் ஆர்வத்தையும் குறைக்கின்றது.
மாறாக பிள்ளைகள் விளையாடும் போது பெரியவர்கள் அவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்கள் பெரிதும் பயன் அடைகின்றார்கள். விளையாட்டுமூலமான கல்வியின்போது அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றபோது அவர்களுக்குக் கிடைக்கின்ற உடனடி உதவியானது அவர்களின் தன்னம்பிக்கை சிதைவதைத் தடுக்கின்றது.
அதுமட்டுமல்லாது பிள்ளைகள் தங்கள் முயற்சிகள் பெரியவர்களால் ரசிக்கப் படுவதையும் பாராட்டப்படுவதையும் பெரிதும் விரும்புகின்றார்கள். இதன்மூலம் அவர்கள் தமக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றார்கள்.