Monday, 16 March 2015

விரக்தியடைந்த பிள்ளை தவறான நடத்தையைக் காட்டத்தான் செய்யும்

சிறு பிள்ளைகள் அவர்களுடைய விளையாட்டுக்களின்போதோ பாடசாலைக் கல்வியின் போதோ தொடர்ச்சியான தோல்விகளைச் சந்திக்கும்போது விரக்தியடைந்து விடுகின்றார்கள்.  இந்த விரக்தியின் பலனாக விளையாட்டுப் பொருட்களைப் போட்டடித்தல், சத்தமிட்டு அழுதல்,  அருகிலுள்ளவர்களுடன் சண்டைசெய்தல் போன்ற தவறான நடத்தைகளைக் (misbehavior) காட்டத்தொடங்க்குவார்கள்.

தம்முடைய முயற்சியொன்றிலே தோற்றுப்போதல் அவர்களுக்குளே ஒருபோதும் சுய மதிப்பை (self -esteem ) வளர்க்கப்போவதில்லை.  மாறாக தாழ்வு மனப்பான்மையே வளர்த்துவிடும்.

எனவே பிள்ளை வழிகாட்டுதலைக் கடமையாகக் கொண்ட பெரியவர்கள், பிள்ளைகளை நன்கு அவதானித்து அவர்கள் விரக்தி நிலையை அடைய முன்பே அவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை வெற்றியாக முடிக்கச் செய்ய  வேண்டும்.


இங்கு நான் முக்கியமாக வலியுறுத்துவது பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் செய்யவேண்டிய உதவியைத்தான்.   இந்த உதவியானது பிள்ளைகள் முயற்சியின்றி  இருக்கும்போது செய்யக்கூடாது.  அது அவர்களில் சோம்பேறித்தனத்தைத்தான் வளர்க்கும்.

மாலதி (4 வயது) உருட்டுக்கட்டையால்  மாவுருண்டையை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்.  அவள் நினைத்ததுபோல அவளால் மாவுருண்டையை உருட்ட முடியவில்லை.  நீண்ட நேர முயற்சிக்குப் பின் அவள் மிகவும் களைப்பும் விரக்தியும் அடைந்தாள்.   கோபத்துடன் உருட்டுக்கட்டையை எறிந்துவிட்டு சத்தமிட்டு அழத் தொடங்கினாள்.  இச்சந்தர்ப்பத்தில்
பின்வருவனவற்றில் பெரியவர் ஒருவரின் சரியான வழிகாட்டும் நடத்தை யாது?

1.  "மாலதி உடனடியாக உருட்டுக்கட்டையை எடுத்து  வை",  என்று அதிகாரத்தொனியில்  கத்திப் பேசுதல்.

2.  எதுவுமே விளங்காததுபோல அலட்சியமாக இருத்தல்

3.  நல்ல பிள்ளைகள் இவ்வாறெல்லாம் செய்ய மாட்டார்கள்,  நல்ல பிள்ளையாக மீண்டுமொருமுறை முயற்சிசெய்யும்படி புத்தி சொல்லுதல்.

4.  உருட்டுக்கட்டையை எடுத்து மாலதியை  மடியில் இருத்தி அவளை ஆறுதல்படுத்தி  அவளுடைய கைகளுக்கு மேலாக தம்முடைய கைகளை வைத்து அவள் விரும்பும் வடிவத்தைச் செய்து முடிக்க உதவி செய்தல்.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான்காவது விடைதான் சரியானது.   சரியான நேரத்தில் கிடைத்த அளவான உதவியானது மாலதிக்குள் தாழ்வு மனப்பான்மையை அல்லாது நல்ல சுய மதிப்பை வளர்த்து விட்டிருக்கும்.

Wednesday, 28 January 2015

குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை வாயில் போட்டுச் சுவைப்பதன் மூலம் கல்வி கற்கின்றார்கள்.


குழந்தைகள் தம் கையில் எந்தப பொருள் அகப்பட்டாலும் அதை வாயில் போட்டு சுவைக்க ஆரம்பித்து விடுவார்கள்.  இது மிகவும் இயற்கையான ஒரு தொழிற்பாடாகும். உண்மையில் இது ஒரு கற்றற் செயற்பாடாகும்.  ஆரம்ப காலங்களில் குழந்தைகள் தம் ஐந்து புலன்களினூடாகவும் தான் கல்வி கற்கின்றார்கள்.  எம் ஐந்து புலன்களில் சுவை கூட ஒன்றுதானே.  குழந்தைகள் தம் சுவையுணர்வைப் பயன்படுத்திக்  கல்வி கற்கும் நோக்கில்தான் தாம் காணும் பொருட்களையெல்லாம் வாயில் போடுகின்றார்கள்.

எம்மில் சிலருக்கு இது ஒரு அருவருப்பு நிறைந்த செயற்ப்பாடாகத் தெரிகின்றது.  நான் இந்தக் கட்டுரையை எழுதுவது இவர்களுக்காகத் தான்.  குழந்தைகள் பொருட்களை வாயில் போட்டு விளையாடுவதைத் தடுப்பதன் மூலம் அவர்களின் கற்றற்  செயற்ப்பாட்டைத் தடுப்பதுடன் அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைப்பவர்களுமாகின்றோம்.  

பெரியவர்களாக இவ்விடயத்தில் நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்.
பிள்ளைகளின் உயிரிற்கும் உடலிற்கும் ஆபத்தில்லாத சுத்தமான விளையாட்டுப் பொருட்களை  குழந்தைகளிற்கு எட்டக்கூடிய இடத்தில வைப்பதாகும்.  மறுதலையாக பிள்ளைகள் விழுங்கக்கூடிய சிறிய பொருட்களையும் ஆபத்தான பொருட்களையும் குழந்தைகளிற்கு எட்டாத இடத்தில் வைப்பதுமாகும்.

Sunday, 11 January 2015

பிள்ளைகளின் சீரான நித்திரையில் அப்பாக்களுக்கும் பங்குண்டு

 பிள்ளைகளின் வளர்ச்சிக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு நித்திரையும் முக்கியமாகும்.  இது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். 7-8 வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகள் இரவு எட்டுமணிக்கெல்லாம் படுக்கைக்குப் போவது முக்கியமாகும்.  அதன் பின்பு அவரவர் படிப்பு வீட்டுப்பாடங்களிற்கேற்ப படுக்கைக்குச் செல்லும் நேரம் பின்தள்ளிப் போகக்கூடும்.  முக்கியமாக கைக்குழந்தைகள் உரிய நேரத்தில் நித்திரை செய்து பழகுதல் வேண்டும்.  இது நவீன கால அம்மாக்களுக்குத் தெரிந்தவிடயம்தான். இப்பொழுதெல்லாம் சிறு பிள்ளைகளிற்கென்று தனியான அறையும் கட்டிலும் கொடுக்கக்கூடிய வசதி அனேகமான  வீடுகளில் உண்டு.

அம்மாக்கள் சிறு பிள்ளைகளை சாதுரியமாக உரிய நேரத்தில் நித்திரைக்குச் செலுத்தினாலும் அப்பாக்களின் புரிந்து கொள்ளாமையினால் அதிக வீடுகளில் இது பிரச்சினையாகி விடுகின்றது.  இது அதிக அம்மாக்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டுத்தான்.

அப்பாக்கள் வீட்டில் இருக்கும்போது மிக மகிழ்ச்சியாக இருந்தால் மிகவும் சத்தமாகவும் ஆரவாரமாகவும் இருப்பார்கள்.  பிள்ளைகளின் நித்திரை நேரம் கடந்தாலும் அதுபற்றி அக்கறை இல்லாமல் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.


இரவு வேலை முடித்து நாடு ஜாமம் பன்னிரண்டு ஒரு மணிக்கு வீடு திரும்புகின்ற அப்பாக்கள் இப்போது மிக அதிகம். அந்த அப்பாக்கள் நாடு ஜாமத்தில் வீட்டில் உள்ள அத்தனை மின் விளக்குகளையும் ஏற்றி மிகவும் சத்தமாக நடமாடுவார்கள்.  அத்துடன் தொலைக்காட்டியையும் மிகச் சத்தமாகத் தூண்டிவிட்டுக்கொண்டு இருப்பார்கள். இதனால் பிள்ளைகளின் நித்திரை பாதிப்புக்குள்ளாகின்றது.   

அப்பாக்கள் இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு பிள்ளைகளின் சீரான நித்திரைக்குத் தமது பங்களிப்பையும் வளங்கவேண்டும்.  அதற்கு முதல் கட்டமாக குழந்தைகள்  இரவு எட்டுமணிக்கு  சத்தம் சந்தடியற்ற கண்ணையுறுத்தும் விளக்குகள் இல்லாத கதகதப்பான சுத்தமான படுக்கையில் படுக்கைக்குச் செல்லவேண்டும் என்ற உண்மையை அப்பாக்களும் உணரவேண்டும்.

பிள்ளைகளைக் காலையில் துயில் எழுப்புவது சிரமமான விடயமா?

Sunday, 28 December 2014

பிள்ளை வளர்ப்பும் சமையலறையும்

சமையலறையானது  சலிப்புடனும் சிரமத்துடனும் வியர்வை சிந்த வேலை செய்யும் ஓர் இடமன்று. மாறாக அது வாழ்வதற்கும், கற்பதற்கும் மகிழ்சியாக இருப்பதற்குமான ஒரு இடமாகும்.

சமையலறையானது  நிச்சயமாக உணவு தயாரிப்பதற்கான ஒரு இடமாகும். அதேவேளையில் அது பிள்ளைகளின் கற்றலுக்கும் பெற்றோர்-பிள்ளைகள் தொடர்பாடலுக்குமான ஒரு இடமாகும். அதுமட்டுமல்லாது அது வாழ்வின் மிக இனிமையான நினைவுகளைத் தரக்கூடிய ஒரு இடமுமாகும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குச் சொந்தமான பிரச்சினைகளும் இறுக்கங்களும் இருக்கும்.  சமையல் வேலை கூட சிரமம் நிறைந்ததாகவும் சலிப்பு நிறைந்ததாகவும் இருக்கக்கூடும்.ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து சமைக்கும்போது அது இனிமையான நினைவுகளைத் தரக்கூடிய இலகுவான வேலையாக மாறக்கூடும்,

சமையல் வேலையை இலகுவானதாகவும் கற்றல் செயற்பாடுகள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கான துணுக்குகள் சில:

1.  அன்றைய சமையலுக்கான உணவு திட்டமிடும்போது பிள்ளைகளின் ஆலோசனைகளையும் கேளுங்கள்.  பிள்ளைகளுக்கு பல்வேறுபட்ட சத்துக்களையும் அவைகொண்டுள்ள உணவு வகைகளையும் கற்பிப்பதற்கு இது பெரிதளவில் உதிவி செய்யும்.  உணவு வல்லுனர்களால் அங்கிகரிக்கப்பட்ட மாதிரி உணவு திட்டமிடல் கீழே உள்ளது. பிள்ளைகள் உணவு திட்டமிட அலோசனைகள் வளங்கும் போது  இந்த அமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.  இந்த அட்டவணையானது உங்கள் சமையலறையை அலங்கரிப்பதாக இருக்கலாம்

2.  சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் போது  பிள்ளைகளையும்  அழைத்துச் செல்லுங்கள்.  அப்பொழுது அவர்களுக்கு சத்துணவு தொடர்பான அறிவு வளர்வதுடன்  அவற்றின் விலை தொடர்பான விபரமும் தெரிய வருகின்றது.

3.  அடுத்ததாகச் சமையல் வேலையில் கூட பிள்ளைகளின் உதவியை நாடுங்கள்.   பிள்ளைகளுக்குச் சுத்தம் பற்றிய கருத்துக்களைச் சொல்லக்கூடிய நேரம் அதுவே.  "  தக்காளியை வெட்டுமுன்பு உன் கைகளை நன்கு கழுவு. அல்லாதுவிடில் உன் கைகளுள் உள்ள கிருமி உணவுப் பொருட்களுடன் கலந்துவிடும்.' போன்ற அறிவுரைகள் அதிக நன்மை பயப்பன.

4.  சமையல் முடிந்த பின்பு சாப்பாட்டு மேசையை அலங்கரிப்பதிலும் பிள்ளைகள் உதவி செய்ய இடமளியுங்கள்..  அவர்களின்   கற்பனைத்திறனுக்கும் இடமளியுங்கள்.  அவர்கள் தவறுகள் செய்யும் போது மிருதுவாகத் திருத்துங்கள்.

5.  குடும்பமாகச் சேர்ந்து உணவு அருந்துங்கள்.  உணவு வேளை மிக ரம்மியமானதாக இருக்க வேண்டும்.   இவ்வேளையில் பிள்ளைகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.  நேர்முகமான( positive)உரையாடலுக்கு இடம் கொடுங்கள்.

6.  இப்போது மிக முக்கியமான கட்டம்.  சாப்பாட்டு மேசையையும் சமையலறையும் சுத்தம் செய்வது.  இதில் கூட பிள்ளைகளின் உதவியை அனுமதியுங்கள்.  பிள்ளைகள் தமக்கு விருப்பமான இசையைக் கேட்டபடியே சுத்தம் செய்ய அனுமதி தாருங்கள்.

சமையலறையும் சமையலும் சுத்தம் செய்தலும் அம்மாவின் வேலை என்ற மனப்பான்மையை அழித்து அது ஒரு குடும்ப வேலை  என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்துங்கள்.  பிள்ளைகள் மட்டுமல்லாது அப்பாக்கள் கூட ஒரு கை கொடுக்க வேண்டும்.  

நீங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெற்றோர்?

உலகில் உள்ள பெற்றோர்கள் 4 வகையாகப் பிரிக்கப் படுகின்றார்கள்.  இதில் நிங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெற்றோர் என்பதையும் எந்த வ ஆகி சரியானது என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

வகை 1.  அதிக கண்டிப்பு உள்ள பெற்றோர்கள்  too strict parents
இவ்வகையைச் சேர்ந்த பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளுக்குக் கட்டளைகள் பிறப்பித்துக் கொ
ண்டே இருப்பார்கள்.  பிள்ளைகள் மறு பேச்சின்றி அவர்களுக்குக் கீழ்ப்படிந்தேயாக வேண்டும்.  அல்லாவிடில் அவர்களுக்கு பெரிய அளவில் தண்டனைகள் வழங்கப்படும். இவர்களின் பிள்ளைகள் எப்போதும் மகிழ்சியற்றவர்களாகவே  காணப்படுவார்கள்.  இவ்வகையான பெற்றொர்கள் தம்முடைய வழி சரியானது எனப் பெரிதும் நம்புகின்றார்கள்.  பெற்றோருக்கான தமது அறிவையும் திறனையும் விருத்திசெய்ய அவர்கள் முயற்சி செய்வதேயில்லை.

வகை 2 : கண்டிப்பு இல்லாத பெற்றோர்  too kind parents
இவர்கள் தங்கள் பிள்ளைகளின் குற்றங்களையும் குறைகளையும் இலகுவாக மன்னிக்கின்றார்கள்.  பிள்ளைகளின் வேலைகளையும் தாங்களே செய்கின்றார்கள் .  பிள்ளைகள் தம்முடைய சுயௌதவித் திறன்களை வளர்ப்பதற்கு இடமளிப்பதேயில்லை.  இங்கு பிள்ளைகள் தண்டிக்கப்படுவதே இல்லை. பிள்ளைகள் மிகவும் மகிழ்சியுடன் இருப்பார்கள்.  ஆனாலும் பிள்ளைகளுக்கு தம்முடைய தவறுகளின் கனாகனம் புரிவதேயில்லை.

வகை 3 :  அளவான கண்டிப்பும் அரவணைப்பும் உள்ள பெற்றோர்  moderate parents
இவர்கள் பிள்ளைகலின் குழப்பமான வேளைகளில் அல்லது நோய் வேளைகளில் அரவணைக்கின்றார்கள்.  பிள்ளைகளின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்கின்றார்கள்.  பிள்ளைகளுடன் நண்பர்கள்போலப் பழகுகின்றார்கள்.  பிள்ளைகள் தம்முடைய வேலைகளைச் செய்ய ஊக்கப்படுத்துகின்றார்கள்.  ஆனாலும் பிள்ளைகளுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக உதவி செய்கின்றார்கள். பிள்ளைகளின் தவறுகளை சரியான முறையில் சுட்டிக் காட்டுகின்றார்கள்.  சிறிய சிறிய வீட்டு விதிகளை அமைத்து தாமும் அதைப் பின்பற்றுகின்றார்கள்.  தமக்கான பெர்ரூருக்குரிய திறமைகளை வளர்ப்பதில் முனைப்புக் காட்டுகின்றார்கள்.

வகை 4 :  செயலற்ற  பெற்றோர்கள்  passive parents
வேலைநிமித்தமாக தம்முடைய பிள்ளைகளுக்காக ஒரு துளி நேரம்தானும் ஒதுக்கமுடியாதவர்கள்,  கடுமையான உடல்உள நோய்வாய்ப்பட்டவர்கள்,  அதிகளவில் மது, போதைவஸ்து என்பவற்றிற்கு அடிமையானவர்கள் இவ்வகையில் அடங்குவர்.  இவர்களின் பிள்ளளகள் இவர்களிடம் வழர்வதைவிட  பொருத்தமான பிற உறவினர்களிடம் அல்லது தொண்டு நிறுவனங்களிடம் வசர்வது சிறந்ததாகும்.

Thursday, 25 December 2014

பிள்ளைகள் தன்னிச்சையாக ஆராச்சி செய்து கற்றலைப் பெரிதும் விரும்புகின்றார்கள்

 பிள்ளைகள் பல வழிகளில் தன்னிச்சையாகக் கல்வி கற்கின்றார்கள்.  அதில் ஆராச்சி செய்து கற்றலும் ஒரு வழியாகும். அது அவர்களுடைய இயற்கைக் குணமாகும்.இதில் பெரியவர்களாக எம்முடைய கடமையெல்லாம் அதற்கேற்ற சூழலை ஏற்ப்படுத்திக் கொடுப்பது மட்டுமேயாகும்.  அவர்கள் கண்களுக்கும் கைகளுக்கும் எட்டக்கூடிய உயரத்தில் உள்ள பெட்டியொன்றில் பல்வேறுபட்ட பாவனையில் இல்லாத வீட்டுப் பாவனைப் பொருட்களைப் போட்டு வைத்தால் அவர்கள் அந்தப் பொருட்களை ஆராச்சி செய்வதில் அதிக நாட்டம் காட்டுவார்கள்.  பழைய பணப்பைகள், பூட்டுக்கள், திறப்புக்கள், பிளாஸ்ரிக் டப்பாக்கள், மூடிகள், வண்ண வண்ணத்துணிகள் என்பவை இந்த ஆராய்ச்சிப் பெட்டிக்குள் போட்டு வைக்கக் கூடிய பொருட்களாகும்.  2, 3 வயதுடைய பிள்ளைகள் இந்தப் பெட்டிக்குள் உள்ள பொருட்களை  ஆராச்சி செய்வதில் அதிக நாட்டம் காட்டுவார்கள்.  அதிக நேரத்தைச்  சத்தமில்லாமல் செலவிடுவார்கள்.  சிறுவயதுப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்ய முடிவாமல் அவதிப்படும்  அம்மாக்களுக்கு இவ் ஆராச்சிப்  பெட்டி பெரிதும் பயன்படும்.  ஏதோ ஒரு கட்டத்தில்  பிள்ளைகளுக்கு இதில் உள்ல பொருட்கள் எல்லாம் அலுத்துப் போகும் போது அவர்கள் அதிலுள்ள பொருட்களை எல்லாம் வீடு முழுக்க வாரி இறைக்கத் தொடங்குவார்கள்.  அப்போது அம்மாக்களின் வேலை இரட்டிப்பு மடங்காகிவிடும். எனவே அவ்வப்போது இப்பெட்டியை பிள்ளைகளின் கண்பார்வையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.  அத்துடன் ஒரே பொருட்களைப் போட்டு வைக்காமல் பெட்டியினுள்ளே வித்தியாசமான பொருட்களைப் போட்டு வைக்க வேண்டும்.

Sunday, 2 November 2014

அன்பான உதவிகள் நிறைந்த அருகாமையானது பிள்ளைகளின் கல்வியை இலகுவாக்கும்

ரமணன் விளையாட்டுக் கட்டைகளை வைத்து அடுக்கி விளையாடிக்கொண்டிருக்கின்றான்.  ஒரு கட்டத்தில் அவனால் அதை அடுக்க முடியவில்லை.  பலமுறை முயன்று பார்க்கின்றான்.
 தொடர்ச்சியான தோல்வி அவனை விரக்தியடைய வைக்கின்றது. கட்டைகளை சுழற்றி எறிந்துவிட்டு சத்தமிட்டு அழுகின்றான்.  இந்த சந்தர்ப்பத்தில் பின்வருவனவற்றில் சரியான அணுகுமுறை எது?

     1.  " இது என்ன பழக்கம். உடனே எழுந்து கட்டைகளை ஒழுங்காக வை " என்று கண்டிப்புடன் கூறுவது.

     2.  "மீண்டும் ஒரு முறை முயற்சி செய். உன்னால் முடியும் " என்று ஊக்கப்படுத்துவது.

     3.    " சிதறிய கட்டைகளை மீண்டும் ஒழுங்காக்கி அவன் எதிர்பார்த்தபடி கட்டி முடித்துக் கொடுப்பது.

     4.      விளையாடிக்கொண்டிருக்கும் அவனை நன்கு அவதானித்து அவன் விரக்தியும் கோபமும் அடைய முன்னதாகவே அவனுக்கு வேண்டிய உதவியைச் சிறிதளவாகச் செய்து அவன் விளையாட்டைத் தொடர ஊக்கப்படுத்துவது.

சந்தேகத்திற்கு இடமில்லாமல் நான்காவது விடையே சரியானது.


சிறு பிள்ளைகள் விளையாட்டின் மூலம் தான் கல்வி கற்கின்றார்கள்.  அதற்கென்றே வடிவமைக்கப் பட்ட விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடும் போது அவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கின்றது. அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்கள் விரக்தியும் கோபமும் அடைந்து விளையாட்டுப் பொருட்களைப் போட்டடித்து சத்தமிட்டு அழும் நிலையும் ஏற்ப்படுகின்றது.  இதனால் அந்தப்பொழுது பயனற்றதாகிப் போவதுடன் பிள்ளைகள் கல்வி கற்கும் ஆர்வத்தையும் குறைக்கின்றது.

மாறாக பிள்ளைகள் விளையாடும் போது பெரியவர்கள் அவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்கள் பெரிதும் பயன் அடைகின்றார்கள். விளையாட்டுமூலமான கல்வியின்போது அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றபோது அவர்களுக்குக் கிடைக்கின்ற உடனடி உதவியானது அவர்களின் தன்னம்பிக்கை சிதைவதைத் தடுக்கின்றது.

அதுமட்டுமல்லாது பிள்ளைகள் தங்கள் முயற்சிகள் பெரியவர்களால் ரசிக்கப் படுவதையும் பாராட்டப்படுவதையும் பெரிதும் விரும்புகின்றார்கள்.  இதன்மூலம் அவர்கள் தமக்குள்ளே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

Thursday, 2 October 2014

உண்மையான ஒரு நிறையுணவானது பல வண்ணங்களைக் கொண்டிருக்கும்

சிறுவர் பராமரிப்பு தொழில் கல்வி என்றாலே அதில் நிச்சயமாக உணவு:- (சத்துணவின் தேவை, சத்துணவு தயாரித்தல், உணவைக் கவர்ச்சிகரமாகப் பரிமாறுதல்) என்று ஒரு பகுதி இருக்கும். அது ஒன்றும் மூளையைக் கசக்கி விளங்கிக்கொள்ள வேண்டிய சிரமமான படிப்பு இல்லை.  ஒரு முறை காதால் கேட்டாலோ அல்லது வாசித்தாலோ விளங்கிக் கொள்ளக் கூடிய விடயம்தான்.  சத்துணவு தயாரிப்பதுகூட  இலகுவானவிடயம்தான்.  ஆனாலும் இதற்குள்கூட ஒரு பிரச்சனை இருக்கிறது.  

Tuesday, 22 October 2013

பிள்ளைகள் தினமும் தமக்குத் தேவையான உடற்பயிற்சிகளை எடுக்க உதவி செய்யுங்கள்

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி செய்தல் ஒவ்வொருவருக்கும் அவசியம்.  தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் சிறுவயதில் இருந்தே ஊட்டப்பட வேண்டும்.

Sunday, 29 September 2013

காலையில் பல் துலக்கச் சரியான நேரம் எது?

காலையில் நித்திரை விட்டு எழுந்தவுடன் பல் துலக்கி முகம் கழுவிய பின்னரே தேநீர் அல்லது காலையுணவை உள்ளெடுக்கும் பழக்கம் எம்மவரிடையே பரவலாக உள்ளது.

பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவின் அவசியம்

மருத்துவ சுகாதார உலகத்தால் இப்போதெல்லாம் காலை உணவின் அவசியம் உலகம் முழுவதிலுமே வலியுறுத்தப் படுகின்றது.  ஒருவர் அன்று நாள்முழுவதும் தொழிற்படுவதற்க்கு வேண்டிய சக்தியைக் காலை உணவு தருகின்றது.  காலை உணவைச் சரிவர எடுக்காத ஒருவரால் அன்றைய நாளுக்கான கடமைகளைச் சரிவரச் செய்து முடிக்காமல் போகலாம்.  விசேடமாக சிறு பிள்ளைகளிற்கும் பள்ளிப் பிள்ளைகளிற்க்கும் காலை உணவு மிகவும் அவசியம்.

ஆனால் பாடசாலைப் பிள்ளைகளிடையே சரிவரக் காலை உணவு அருந்தாத பழக்கம் நிலவுகின்றது.  காலை நேர அவசரத்தில் பஸ்ஸை விட்டுவிடுவோமோ அல்லது பாடசாலைக்குப் பிந்தி விடுவோமோ என்கிற பதட்டத்தில் பிள்ளைகள் காலை உணவை அலட்சியம் செய்கின்றார்கள்.

ஆனாலும் பெற்றோர் காலை உணவின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்தி அவர்கள் காலை உணவு உண்ண வலியுறுத்த வேண்டும்.  காலை உணவானது சக்தி தரக்கூடிய பாண், பட்டர் அல்லது அதற்குச் சமமான உணவைக் கொண்டிருப்பதுடன் பால் பழம் போன்ற போசணை உணவுகளையும் கொண்டிருக்க வேண்டும்.

மேலதிக வாசிப்புக்களுக்கு மாலா காலை உணவு உண்கின்றாள்
                                                          maala is having breakfirst

Saturday, 28 September 2013

பிள்ளைகளைக் காலையில் துயில் எழுப்புவது சிரமமான விடயமா?

காலை வேளை என்றாலே எல்லா வீடுகளிலும் அவசரமும் tensionனும் தான்.  வேலைக்குப் போபவர்கள், பாடசாலை போபவர்கள், கலாசாலை போபவர்கள் எல்லோரும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற நேரம் அது. அந்த அவசரமான வேளைகளில் வீட்டிலுள்ள சிறுபிள்ளைகள் நித்திரை விட்டு எழும்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பார்களே, அது உண்மையிலேயே அம்மாமாரைச் சிரமப் படுத்துகின்ற காரியம் தான்.

பிள்ளைகள் நித்திரை விட்டு எழும்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பதற்குக் காரணம் அவர்கள் போதிய அளவு நித்திரை செய்யவில்லை என்பதேயாகும்.
பிள்ளைகளுக்கு போதிய அளவு நித்திரை கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் சில

1.  சிறு பிள்ளைகளை இரவு 8.00 மணிக்கே நித்திரைக்கு அனுப்ப வேண்டும்.
2.  அவர்களை தனியான கட்டிலிலோ அல்லது படுக்கையிலோ தனியாகப் படுக்கப் பழக்குதல் வேண்டும்.
3.  பிள்ளைகள் படுக்கும் இடம் கடினமானதாக இல்லாமல் சொகுசானதாக இருக்க வேண்டும்.
4. பிளைகளின் படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை எல்லாம் சுத்தமானதாக மனதுக்கு ரம்யம் தருவனவாக இருக்க வேண்டும்.
5. இரவு உணவு கனதியானதாக இல்லாமல் இலகுவானதாக இருக்க வேண்டும்
6. பிள்ளைகளை இயன்றவரை தனியான, கதக்தப்பான வெப்பநிலை உள்ள அறையிலே தூங்க விட வேண்டும்.
7. பிள்ளைகள் தூங்கும் நேரத்தில் அறையில் அளவுக்கு அதிகமான வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8. பிள்ளைகள் தூங்கும் அறை சத்தம் இல்லாதவேறு அமைதியாக இருக்க வேண்டும்.

இவ்வளவு ஏற்ப்பாடுகளையும் பிள்ளைகளுக்குச் செய்யும் போது பிள்ளைகள் நிச்சயம் தமக்குத் தேவையான அளவு நித்திரையையும் ஓய்வையும் எடுப்பார்கள்.  காலை வேளைகளில் எழும்பமாட்டேன் என்று அடம் பிடிக்கமாட்டார்கள்.

மேலதிக வாசிப்புக்கு
மேலதிக வாசிப்புக்கு