Tuesday, 22 October 2013

பிள்ளைகள் தினமும் தமக்குத் தேவையான உடற்பயிற்சிகளை எடுக்க உதவி செய்யுங்கள்

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி செய்தல் ஒவ்வொருவருக்கும் அவசியம்.  தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் சிறுவயதில் இருந்தே ஊட்டப்பட வேண்டும்.

Sunday, 29 September 2013

காலையில் பல் துலக்கச் சரியான நேரம் எது?

காலையில் நித்திரை விட்டு எழுந்தவுடன் பல் துலக்கி முகம் கழுவிய பின்னரே தேநீர் அல்லது காலையுணவை உள்ளெடுக்கும் பழக்கம் எம்மவரிடையே பரவலாக உள்ளது.

பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை உணவின் அவசியம்

மருத்துவ சுகாதார உலகத்தால் இப்போதெல்லாம் காலை உணவின் அவசியம் உலகம் முழுவதிலுமே வலியுறுத்தப் படுகின்றது.  ஒருவர் அன்று நாள்முழுவதும் தொழிற்படுவதற்க்கு வேண்டிய சக்தியைக் காலை உணவு தருகின்றது.  காலை உணவைச் சரிவர எடுக்காத ஒருவரால் அன்றைய நாளுக்கான கடமைகளைச் சரிவரச் செய்து முடிக்காமல் போகலாம்.  விசேடமாக சிறு பிள்ளைகளிற்கும் பள்ளிப் பிள்ளைகளிற்க்கும் காலை உணவு மிகவும் அவசியம்.

ஆனால் பாடசாலைப் பிள்ளைகளிடையே சரிவரக் காலை உணவு அருந்தாத பழக்கம் நிலவுகின்றது.  காலை நேர அவசரத்தில் பஸ்ஸை விட்டுவிடுவோமோ அல்லது பாடசாலைக்குப் பிந்தி விடுவோமோ என்கிற பதட்டத்தில் பிள்ளைகள் காலை உணவை அலட்சியம் செய்கின்றார்கள்.

ஆனாலும் பெற்றோர் காலை உணவின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்தி அவர்கள் காலை உணவு உண்ண வலியுறுத்த வேண்டும்.  காலை உணவானது சக்தி தரக்கூடிய பாண், பட்டர் அல்லது அதற்குச் சமமான உணவைக் கொண்டிருப்பதுடன் பால் பழம் போன்ற போசணை உணவுகளையும் கொண்டிருக்க வேண்டும்.

மேலதிக வாசிப்புக்களுக்கு மாலா காலை உணவு உண்கின்றாள்
                                                          maala is having breakfirst

Saturday, 28 September 2013

பிள்ளைகளைக் காலையில் துயில் எழுப்புவது சிரமமான விடயமா?

காலை வேளை என்றாலே எல்லா வீடுகளிலும் அவசரமும் tensionனும் தான்.  வேலைக்குப் போபவர்கள், பாடசாலை போபவர்கள், கலாசாலை போபவர்கள் எல்லோரும் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற நேரம் அது. அந்த அவசரமான வேளைகளில் வீட்டிலுள்ள சிறுபிள்ளைகள் நித்திரை விட்டு எழும்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பார்களே, அது உண்மையிலேயே அம்மாமாரைச் சிரமப் படுத்துகின்ற காரியம் தான்.

பிள்ளைகள் நித்திரை விட்டு எழும்ப மாட்டேன் என்று அடம் பிடிப்பதற்குக் காரணம் அவர்கள் போதிய அளவு நித்திரை செய்யவில்லை என்பதேயாகும்.
பிள்ளைகளுக்கு போதிய அளவு நித்திரை கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் சில

1.  சிறு பிள்ளைகளை இரவு 8.00 மணிக்கே நித்திரைக்கு அனுப்ப வேண்டும்.
2.  அவர்களை தனியான கட்டிலிலோ அல்லது படுக்கையிலோ தனியாகப் படுக்கப் பழக்குதல் வேண்டும்.
3.  பிள்ளைகள் படுக்கும் இடம் கடினமானதாக இல்லாமல் சொகுசானதாக இருக்க வேண்டும்.
4. பிளைகளின் படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை எல்லாம் சுத்தமானதாக மனதுக்கு ரம்யம் தருவனவாக இருக்க வேண்டும்.
5. இரவு உணவு கனதியானதாக இல்லாமல் இலகுவானதாக இருக்க வேண்டும்
6. பிள்ளைகளை இயன்றவரை தனியான, கதக்தப்பான வெப்பநிலை உள்ள அறையிலே தூங்க விட வேண்டும்.
7. பிள்ளைகள் தூங்கும் நேரத்தில் அறையில் அளவுக்கு அதிகமான வெளிச்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8. பிள்ளைகள் தூங்கும் அறை சத்தம் இல்லாதவேறு அமைதியாக இருக்க வேண்டும்.

இவ்வளவு ஏற்ப்பாடுகளையும் பிள்ளைகளுக்குச் செய்யும் போது பிள்ளைகள் நிச்சயம் தமக்குத் தேவையான அளவு நித்திரையையும் ஓய்வையும் எடுப்பார்கள்.  காலை வேளைகளில் எழும்பமாட்டேன் என்று அடம் பிடிக்கமாட்டார்கள்.

மேலதிக வாசிப்புக்கு
மேலதிக வாசிப்புக்கு

Friday, 2 August 2013

போதிய நித்திரையின்மை என்பது புதிய பெற்ரோர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாகும். போதிய நித்திரை பெறுவதற்க்கான சிறு துணுக்குகள்


 


அன்பால் இணைந்த கணவனுக்கும் மனைவிக்கும் புதிதாக ஒரு குழந்தை பிறந்தாலே ஆனந்தம் தான்.  ஆனாலும் புதிய குழந்தையின் வரவுடன், பெற்ரோரின் விசேடமாக அம்மாக்களின் நித்திரை பறிபோய்விடுகின்றது.  இது உண்மையிலேயே பெரியதொரு பிரச்சனைதான்.  பிறந்த குழந்தையை சரிவர வளர்ப்பதற்க்கு பெற்ரோருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும் உள ஆரோக்கியமும் அவசியம்.  போதிய நித்திரையின்மை இது இரண்டையுமே பாதிக்கும்.  கீழேயுள்ள துணுக்குகள் புதிய பெற்ரோருக்கு ஓரளவாவது போதிய நித்திரை கிடைக்க உதவி செய்யும் என நம்புகின்றேன்.

1. முறை வைத்து பராமரித்தல்-  பிள்ளை பிறந்த ஆரம்ப நாட்களில் இரவு வேளைகளிலே பிள்ளை எழுந்தவுடன் பெற்ரோர் இருவருமே கண்விழித்து விடுகின்றார்கள்.  இதனால் இருவருக்குமே போதிய நித்திரை கிடைக்காமல் போய்விடுகின்றது.  இதை விடுத்து, முறையாகத் திட்டமிட்டு ஒருவர் நித்திரை செய்ய யாரவது ஒரு பெற்ரோர் மட்டும் கண்விழித்தல் பயனுள்ளதாகும். இதையே மாற்றி மாற்றி செய்வதால் இருவதுக்கும் போதிய நித்திரை கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.

2.  பிள்ளையுடன் சேர்ந்து நித்திரை செய்தல்- பிறந்த பிள்ளை ஒரு நாளில் பல தடவைகள் பகல் வேளைகளிலே நித்திரை செய்யும்.  இதில் ஏதாவது ஒரு முறை பிள்ளையுடன் சேர்ந்து நித்திரை செய்ய வேண்டும்.  இவ்விதம் பகல் நித்திரை செய்து எழுந்திருக்கும் போது மீதி நேரத்தில் பிள்ளையைப் பராமரிப்பதற்கும் ஏனைய வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்கும் போதிய உற்ச்சாகமும் சக்தியும் கிடைக்கும்.

3. பிறரிடம் உதவி நாடல்- வீட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு நித்திரை செய்யலாம்.  அனேகமான உறவினர்களும் நண்பர்களும் மனமுவந்து இந்த உதவியைச் செய்வார்கள்.
பிள்ளை பாதுகாப்பாக கண்காணிக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை வரும்போது போதிய திருப்தி ஏற்ப்படும் வரை பெற்றோர் முக்கியமாக தாய் நித்திரை செய்யலாம்.

4.  தாய் நித்திரை செய்வதற்க்கு முன்னர் பிள்ளைக்கு பால் அருந்தக் கொடுத்தல்- அனேகமாகப் பிள்ளைகள் இரவு வேளைகளிலே பசி காரணமாகத்தான் எழும்புகின்றன. பசி இல்லாமல் நிறைந்த வயிற்ருடன் படுக்கும் போது அவர்கள் தொடர்ச்சியாக நித்திரை செய்வார்கள்.  இதனால் அம்மாக்களும் இடையூறில்லாமல் யித்திரை செய்ய வாய்ப்பு இருக்கின்றது.

5.  தாய் நித்திரைக்குப் போவதற்க்கு முன் பிள்ளையின் diappar ஐ மாற்றுதல்

6.  ஒரு Babysitter ஐ நியமித்தல்- பொருளாதார வசதி இடம் கொடுக்கின்ற ப்ட்சத்தில் பகல் வேளைகளல் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களிற்க்கு ஒரு பராமரிப்பாளரை நியமிக்கலாம்.  இந்த வேளையில் தாய் போதிய நித்திரையை எடுத்துக் கொள்லலாம்.

புதிய அப்பாக்களுக்கு ஒரு வார்த்தை
புதிதாகக் குழந்தை பெற்ற உங்கள் மனைவி பிள்ளைப் பேற்ரின் போது அதிகளவு சக்தியை இழந்திருப்பார்.  உடற்பலவீனமான நிலையில் இருக்கும்போதே பிறந்த குழந்தையைப் பராமரிக்க வேண்டிய கடினமான புதிய பொறுப்பும் அவர்களுக்கு சேர்ந்துவிடுகின்றது.  நீங்கள் புரிந்துணர்வுடன் செயல்ப்பட வேண்டிய முக்கிய தருணம் இது. ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றி உங்கள் மனைவி போதிய அளவி நித்திரை செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.

Wednesday, 31 July 2013

உங்கள் குழந்தைகளின் கல்வி கற்க்கும் திறனை அன்புப் பராமரிப்பின் மூலம் ஊக்கப் படுத்துங்கள்

கல்வி கற்றல் என்றால் என்ன?  ஒரு பிள்ளை தன்னைச் சூழவுள்ள சூழலையும் உலகத்தையும் அறிதலே கல்வி கற்றல் ஆகும்.  ஒரு பிள்ளை எப்போது கல்வி கற்க ஆரம்பிக்கின்றது?  அது தான் பிறந்த கணத்தில் இருந்தே கல்வி கற்க்க ஆரம்பிக்கின்றது.  சாதாரண பாடசாலைக் கல்வியில் மொழி ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. சின்னஞ்சிறு குழந்தையால் கற்றலுக்காக மொழியை ஒரு ஊடகமாகப் பயன்படுத்த முடியாத பருவத்தில் அது தனது ஐந்து புலன்களையுமே கற்றலுக்காக அதாவது சூழலை அறிவதற்க்காகப் பயன்படுத்துகின்றது.  உதாரணமாக ஒரு ஐந்து மாத வயதுடைய பிள்ளைக்கு ஒரு விளையாட்டுப் பொருளைக் கொடுக்கும் போது, அது அதனைத் தொட்டு, முகர்ந்து, சுவைத்து, பார்த்து, அதிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அப்பொருளை ஆராச்சி செய்கின்றது.  குழந்தை வளர வளர அதனுடைய சூழலின் பரப்பும் அதிகரிக்கின்றது.  அது ஆராச்சி செய்யவேண்டிய பொருட்களின் அளவும் அதிகரிக்கின்றது.

சுதந்திரக் கல்வி
குழந்தைகள் சுதந்திரமான கல்வியையே விரும்புகின்றார்கள்.  பெற்றோர் தாம் விரும்பும் ஒரு பொருளை ஆராச்சி பண்ணும்படி தம் குழந்த்தையை வற்ப்புறுத்த முடியாது. குழந்தைகள் தாம் விரும்பும் நேரத்தில் தாம் விரும்பும் பொருட்களையே ஆராச்சி பண்ன்ண விரும்புகின்றன.

குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்தல்
குழந்த்தைகளின் கல்விச்சுதந்திரத்தில் பெற்றோர் தலையிடுவது வரவேற்க்கத்தக்கது இல்லையாயினும் அவர்களின் கல்வியை ஊக்குவிப்பது பெற்றோரின் தலையாய கடமையாகும்.  இதற்காக பெற்றோர் ஒரு முக்கிய உண்மையை அறிந்திருத்தல் வேண்டும். குழந்தை தான் நம்பிக்கை வைக்கின்ற ஒரு சூழலைத்தான் ஆராச்சி பண்ண முற்படும்.  ஒரு சூழலைப் பார்த்துக் குழந்தை பயப்படுமாயின் அது அச்சூழலைப் பற்றி அறியவோ அல்லது ஆராச்சி பண்ணவோ முற்படாது.  இதனால் குழந்தைக்கு ஒரு நம்பிக்கையான சூலலை ஏற்ப்படுத்துவது பெற்றோரின் கடமையாகின்றது.

கற்றலுக்கு உகந்த நம்பிக்கையான சூழல்
கற்றலுக்கு உகந்த ஒரு நம்பிக்கையான சூழலானது அன்பான பராமரிப்பு மூலமே குழந்தைக்கு வழங்கப்படலாம்.  உலகில் உள்ள அத்தனை பெற்றோரும் தம் பிள்ளைகளை அன்பு செய்யத்தான் செய்கின்றார்கள்.  ஆனாலும் தம் உள்ளத்து அன்பை ஆரோக்கியமான அன்புப் பராமரிப்பாகக் கொடுப்பது எல்லாப் பெர்றோருக்கும் சாத்தியம் இல்லை.

குழந்தை விளையாட்டினூடாகச் சூழலை ஆராச்சிபண்ணிக் கல்வி கற்க்கும்போதெல்லாம் பெற்றோருடைய அல்லது பொறுப்பான பெரியவர்களின் பிரசன்னத்தை வேண்டி நிற்க்கின்றது. விளையாட்டின் போது ஏற்ப்படும் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஏற்ப்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும், தன்னுடைய வெற்றிகளின்போது பாராட்டவும், தோல்விகளிபோது அரவணைத்துக் கொள்ளவும் அது பெரியவர்களின் அருகாமையை வேண்டி நிற்க்கின்றது.

பெற்றோருக்கு ஒரு வார்த்தை
உங்கள் குழந்தைகளின் கல்வி கற்க்கும் திறனை ஊக்கப்படுத்தும் முகமாக அன்புப் பராமரிப்பைக் கொடுப்பதற்க்காக அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அன்புப் பராமரிப்பைக் குழந்த்தைக்குக் கொடுக்கின்றீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அது கல்வி கற்க்கும்.  அவர்களுக்கு ஆபத்துக்கள் அற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் கற்றலைத் தூண்டும் முக்கியமான விடயமாகும்.

Wednesday, 3 July 2013

உணவு விருப்பைத் தூண்டக்கூடிய வகையில் அழகாக வெட்டி அடுக்கப்பட்ட கரட் துண்டுகள்.

இது என்னுடைய சொந்த்தக் கற்பனை அல்ல.  என் மகளின் பாடசாலையில் பெற்றோர், ஆசிரியர், மாணவர் ஒருங்குகூடல் விழா ஒன்றிற்காகச் சென்றிருந்தபோது கண்டது.  பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போய்விட்டது.  பிறகு என்ன, வீடு வந்ததும் அதே விதமாகவே செய்து பார்த்தேன்.  நல்ல பலன் கிடைத்தது.  இபோதெல்லாம் அடிக்கடி என் சாப்பாட்டு மேசையில் இந்தக் கரட் துண்டுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன.  சத்துணவுக்கு சத்துணவும் ஆகிற்று மேசை அலங்காரத்துக்கு மேசை அலங்காரமும் ஆகிற்று.

எல்லா அம்மாக்களும் போலவே என்னுடைய பெரும் பொளுதும் சமையலறையில் தான் கழிகின்றது.  என் பிள்ளைகள் எனக்கு ஏதாவது கதை சொல்ல வேண்டும் என்றாலும், என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றாலும் சமையலறைக்குத்தான் வரவேண்டும்.  அப்படி சமையலறைக்கு வரும் போதெல்லாம் அவர்களை அறியாமல் இந்தக் கரட் துண்டுகள் அவர்கள் வாயில் நுழைவதை நான் அவதானித்திருக்கின்றேன்.  கூடவே அவர்களுடைய நண்பர்களும் இருந்தால் போதும்.  உள்ளே செல்லும் கரட் துண்டுகளின் அளவு அதிகரிக்கத்தான் செய்கின்றது.  முயற்ச்சித்துப் பாருங்களேன், நண்பர்களே!

Friday, 28 June 2013

டாக்டருக்குப் படிப்பது போல வக்கீலுக்குப் படிப்பதுபோல பெற்றோருக்கும் படிக்க வேண்டும்

ஒருமுறை ஏழாம் வகுப்பில் படிக்கின்ற என் மகள் ஒரு வீட்டுப்பாடத்துடன் வந்தாள்.  மழைக்காடுகள் பற்றி  ஆங்கில மொழியில் அவள் ஒரு புத்தகம் தயாரிக்க வேண்டும்.  அவள் பாடம் படிக்கும் மொழியோ ஜேர்மன் மொழி.  அவள் இணையத்தில் தேவையான தரவுகள் திரட்ட வேண்டு.  பின்பு பொருத்தமான படங்களை அச்சுப்பிரதி எடுக்க வேண்டும்.  பின்பு ஜேர்மன் மொழியில் எடுத்த குறிப்புக்களை ஆங்கில மொழிக்கு மாற்ற வேண்டும்.  பின்பு அவற்றைஎல்லாம் ஒரு புத்தக வடிவில் தயாரிக்க வேண்டும்.  இவ்வளவும் செய்வதற்க்கு என்னுடைய உதவி அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது. அந்த நேரம் பார்த்து மடி கணணி இணையத்தை இழுத்துத் தர மாட்டேன் என்று தொந்தரவு செய்தது.  ஒருவாரு அதைச் சரி செய்ய printer அச்சுப்பிரதி எடுத்துத்த்தர மாட்டேன் என்று அடம் பிடித்தது.  ஒருவாறு printerரைத் திருத்தி எடுத்து தேவையான படங்களைப் பெற்றுக்கொண்டபின் அவள் ஜேர்மன் மொழியில் தொகுத்திருந்த குறிப்புக்களை ஆங்கில மொழிக்கு மாற்ற வேண்டி இருந்தது.  இவ்வளவு வேலையும் முடிய இரவு 12 மணியாகிவிட்டது.  இதற்குப் பின்பும் அந்தச் சின்னப் பெண்ணால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  அம்மா நீங்களே புத்தகமாகக் கட்டிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு நித்திரைக்குச் சென்றுவிட்டாள்.

இதுவாவது சற்றுச் சிரமம் குறைந்த வேலை.  பிறிதொரு நாளில் இன்னுமொரு வீட்டுப் பாடத்துடன் வந்தாள்.  அவள் உயிரியல் படிக்க ஆரம்பித்த நேரம் அது.  மனித முள்ளந்தண்டு போன்ற மாதிரி ஒன்று தயாரிக்க வேண்டும்.  இம்முறை நான் தப்பித்தேன்.  மாட்டிக் கொண்டது அவள் அப்பா தான்.  தேவையான மூலப் பொருட்களை எங்கு வாங்குவது என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஆனாலும் செல்ல மகள் கேட்டு விட்டாளே.  கடைகடையாக ஏறி இறங்கி ஒரு மாதிரியாகத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தார்.  வழக்கம் போலவே ஒரு எல்லைக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மகள் போய்ப் படுத்து விட்டாள். தகப்பனார் தன்னுடைய வேலை முடிக்க இரவு ஒரு மணியாகி விட்டது.  இதோ அவர் செய்த மாதிரி முள்ளந்தண்டு.
அப்பப்பா! ஒரு பதின் மூன்று வயது பள்ளிப் பிள்ளைக்குப் பெற்றோராக இருக்க எவ்வளவு தகமைகளையும் திறமைகளையும் கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது.  எமக்கு முடிந்த்த திறமைகள் கையளவுதான்.  இன்னும் முடியாத திறமைகள் கடலளவு இருக்கின்றனவே.

இன்று நான் இந்தக் கட்டுரையை எழுதுவதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது எனக்குத் தாயகத்திலேயே தெரிந்த பெண் ஒருவர் இங்கு புலத்திலே வாழ்கின்றார்.  தொலைபேசியில் பேசும் போது எல்லாம் தனக்கு விதம் விதமான தாயக உணவுகள் சமைக்கத் தெரியும் என்று பெருமையாகச் சொல்லுவார்.  எல்லாம் இங்கு வந்து பழகியதுதானாம்.  அது மட்டும் அல்லாது தன் பிள்ளைகளிற்க்கு விதம் விதமான தாயகப் பட்டாடைகள் அணிவித்து விழாக்களிற்க்கு அழைத்துச் செல்வார்.  அவருடைய கதைகளைக் கேட்கும் போது எனக்குச் சற்றே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும்.  ஏனன்றால் புலத்திலே இருந்து கொண்டு தாயக வாழ்வு வாழ என்னால் முடியவில்லை.  அது என்னுடைய திறமைக்குறைவு என்றே நான் கருதுகின்றேன்.

ஒருமுறை அந்தப் பெண் முகப் புத்தகத்திலே (face book) தன் பிள்ளைகளின் அழகான படங்களை இணைத்திருந்தார்.  கண்ட மாத்திரத்திலே எனக்கு அவரின் அழகான சிறுமிப் பருவம் நினைவுக்கு வந்தது.  உடனே, “நீங்கள் உங்கள் அம்மா போல அழகாக இருக்கிறீர்கள்”, என்று அந்தச் சிறுமிகளை விழித்து ஜேர்மன் மொழியிலே எழுதியிருந்தேன்.  இரண்டு நாட்கள் கழித்து அந்த்தப் பெண் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  “ நீங்கள் என்னைக் “குண்டு” என்று முகப் புத்தகத்திலே குறிப்பிட்டு இருக்கிறீர்கள் என்று சற்றே மனஸ்தாபத்துடன் கூறினார்.  நான்,” இல்லையே, அழகு என்றல்லவா குறிப்பிட்டிருக்கின்றேன்,” என்று கூறினேன்.  உண்மையில் நடந்த்தது என்ன?  நான் எழுத்திய மிகச் சிறிய யேர்மன் மொழிமூல வசனம் அவருக்குப் புரியவில்லை.உடனேயே எனக்குள் இருக்கின்ற சிறுவர் பராமரிப்பாளர் விளித்துக் கொண்டார்.

ஒவ்வொருவருக்கும் 24 மணிநேரங்கள் தானே கொடுக்கப்பட்டிருக்கின்றது.  எனக்கும் அந்த 24 மணினேரங்கள் தான்.  ஒரு அம்மாவாக எனக்குக் கிடைத்த நேரத்தில் வேலை நேரம் போக மீதி நேரத்தில் அம்மாவுக்கான திறமைகளை (parenting skill) வளர்த்துக் கொள்ளத்தான் சரியாக இருக்கின்றது.  பலகாரம் சுடுத்தல், நண்பர் வீட்டுக் கொண்டாட்டத்திற்கு தேவையான பலகாரங்களைப் பொறுப்பெடுத்துச் செய்தல்.  என்பன எனக்கு முடியவே இல்லை.  எனக்குக் கிடைத்த 24 மணிநேரம் தானே மற்றப் பெண்களுக்கும் கிடைக்கின்றது.  அவர்களுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் சாத்தியம் என்று வியந்திருக்கின்றேன்.  சத்தியமாகச் சொல்கின்றேன்.  இவற்றிற்கெல்லாம் நான் எதிரியில்லை.  இது எப்படிச் சாத்தியமாகின்றது என்ற கேள்விதான் மனதில் எஞ்சிநிற்கின்றது.  மனத்தில் ஒரு சந்தேகமும் வந்து நிற்கின்றது.  ஒருவேளை இவர்கள் எல்லாம் அம்மாப்படிப்புப் படிக்கவேண்டிய நேரத்தைத் தான் சூறையாடுகின்ரார்களோ என்று எண்ணிக்கொள்வேன்.

இந்த்தப் பெண்ணின் விடயத்திற்க்குப் பிறகு என்னுடைய சந்த்தேகம் முற்றாக வலுப்பெற்று விட்டது.  உண்மைதான்.  எமக்கென்று கொடுக்கப்பட்ட 24மணி நேரத்தில் எம்முடைய வேலை நேரம் போக மீதி நேரத்தில் நாம் எம் பிள்ளைகளுக்கு உதவக்கூடிய திறன்களை வளர்ப்பதில்தானே அக்கறை காட்ட வேண்டும்.  அது எம் பிள்ளைகளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்.
.

Friday, 21 June 2013

பிள்ளைகளை வழிநடத்த காரணம் கூறுதல் ஒரு சிறந்த வழிமுறையாகும்

”மாறன், நீ இன்று விளையாடப் போக முடியாது,” என்று மாறனின் தயார் சொன்னார்.
”ஏன்,” மாறன் சிணுங்கினான்.
”ஏனா, ஏனென்று தெரியாதா உனக்கு. யன்னலுக்கு வெளியே பார்”  தயார் சத்தமிட்டார்.

மாறனின் தாயார் மட்டுமல்லாது எம்மில் பலபேர் அப்படித்தான் இருக்கிறோம்.  ஒரு செயற்ப்பாட்டிற்க்கான காரணத்தைப் பிள்ளைகள் தாமே சுயமாகத் தெரிந்து இருக்க வேண்டும் என எதிர்பாற்க்கின்றோம் அல்லது காரணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டிய தேவை பிள்ளைக்கு இல்லை என எண்ணுகின்றோம்.  நாம் சொல்வதை மறுபேச்சு இல்லாமல் பிள்ளை கீழ்ப்படிவுடன் செய்து முடிக்க வேண்டும் என எண்ணுகின்றோம்.

உண்மையிலேயே இது ஒரு தவறான அணுகு முறையாகும்.  இந்த இடத்திலே மாறனின் தாயார், “ மாறன், இன்று நீ விளையாடப் போக முடியாது.  எனென்றால் வெளியே மழை பெய்கின்றது” என்று சொல்லியிருக்க வேண்டும்.  இந்த வாக்கியத்திலே எதிர்பார்க்கப்படும் நடத்தைக்கான கரணம் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஏன்தான் இப்படிக் காரணம் கூறி வழிநடத்த வேண்டும்? இவ்விதமாகக் காரணம் கூறி வழிநடத்துவதால் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன.

1.  பிள்ளைகளிடையே சுய ஒழுக்கத்தை வளர்க்கலாம்.

2.  பிள்ளைகளிடையே சமூக ஆதரவு நடத்தையை (pro social behaviour) வளர்க்கலாம்.

காரணம் கூறுதலும் சுய ஒழுக்கமும்
ஒரு நடத்தைக்கான காரணத்தைப் பிள்ளைகளுக்குச் சொல்லும் போது பிள்ளைகள் எதிர்காலத்திலும் இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறுதான் நடக்க வேண்டும் என்ற சுய கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதாவது இன்று விளையாடப் போக முடியாது எனென்றால் வெளியே மழை பெய்கின்றது,?” என்று காரணத்துடன் கூடிய கட்டளையை விடுக்கும் போது பிள்ளை எப்பொழுதெல்லாம் மழை பெய்கின்றதோ அப்பொழுதெல்லாம் விளையாடப் போகக் கூடாது என்ற அறிவையும் சுய கட்டுப்பாட்டையும் வளர்த்துக் கொள்கின்றது.

காரணம் கூறுதலும் சமூக ஆதரவு நடத்தையும்.
சமூக ஆதரவு நடத்தை என்பது இருவருக்கான நட்பான நடத்தையாகும்.  இது இரண்டு வகைப்படும்.  ஒன்று மற்றொருவருடன் அல்லது பலருடன் சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்வது.  மற்றையது உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு உதவுவது.
“ மாலா, உன் தம்பிக்கு வீட்டுப்பாடம் செய்ய உதவி செய், அதனால் அவன் விரைவாக வீட்டுப் பாடம் செய்து முடித்துவிடுவான்.”
“கண்ணன் அந்தப் பொம்மையைத் திரும்பவும் லதாவிடம் கொடுத்துவிடு.  அவள் அதை வைத்திருக்க ஆசைப்படுகின்றாள்.
இவ்விதமான காரணங்கூறி வழிநடத்துவதனால் பிள்ளைகள் பிறருக்கு உதவவும் பிறருக்கு இடஞ்சல் இல்லாமல் இருக்கவும் பழகிக் கொள்கின்றார்கள்.

இந்தக்கட்டுரை தொடர்பான சிறு பரீட்சைஒன்று. மாறனின் தாயார் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மாறனுடன் பேசிய பேச்சுக்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியான முறையில் காரணங்கூறலுடன் வழிநடத்தப்படும் விடையைத் தெரிவு செய்யவும்.


மாறன் கையில் கத்தி வைத்திருக்கின்றான்.  மாறனின் தாயார் சொல்கின்றார்
1.  “சிறு பிள்ளைகள் கத்தி பாவிப்பது இல்லை என்று உனக்குத் தெரியாதா?”
2.  “உனக்குக் கண் இல்லையா? கத்தி எவ்வளவு கூராக இருக்கின்றது என்று      பார்.”
3.  ”நீ கத்தியைத் தொடும் போது காயப்படுவாய், ஏனென்றால் கத்தி கூராக இருக்கின்றது.”

மாறனின் தம்பி நித்திரை செய்கின்றான்.   மாறன் சத்தம் செய்கின்றான்.
1.  ”மாறன் ஏன் இப்படிச் சத்தம் செய்கின்றாய்.  நீ இப்படிச் சத்தம் செய்தால் நான் எப்படித் தம்பியை நித்திரையாக்குவது?”
2.  ”மாறன், தம்பி நித்திரை செய்யும்போது சத்தம் செய்யாதே என்று எத்தனை தரம் சொல்லியிருக்கின்றேன்?”
3.  “மாறன் தம்பி நித்திரை செய்கின்றான்.  தயவுசெய்து விளங்கிக்கொள்.”
4.  ” மாறன், சத்தத்தைக் குறைத்துக்கொள்.  அப்போது தம்பி இடஞ்சல் இல்லாமல் நன்றாக நித்திரை செய்வான்.”

மாறன் சாப்பாட்டு மேசையில் இருந்து வண்னம் தீட்டுகின்றான்.
1.  ”மாறன் வேலை முடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்ய மறக்காதே.  உனக்குக் காரணம் தெரியும் என்று நினக்கின்றேன்.”
2.  “நல்ல பிள்ளைகள் வேலை முடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்வார்கள்.”
3.  மாறன் வேலைமுடிந்ததும் மேசையைச் சுத்தம் செய்துவிடு.  நான் சாப்பாட்டிற்க்காக மேசையை ஆயத்தம் செய்ய வேண்டும்.

சந்தேகமே இல்லை.  மூன்று சந்தர்ப்பங்களிலும் கடைசி விடைகளே சரியானவை.

Sunday, 16 June 2013

பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும் பிள்ளைகள் கோபமும் குழப்பமும் உள்ளவர்களாக இருப்பது ஏன்?

"பாடசாலை விட்டு வீடு வரும் பிள்ளைகள் கோபமும் குழப்பமும் மூர்க்கமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்" என்று அதிகமான பெற்றோர் முறைப்படுகின்றார்கள்.  சாதாரண பேச்சுத் தமிழில் சொல்வதாக இருந்தால் 'ததிங்கினதோம் போடுகின்றார்கள்' என்று சொல்லலாம்.  இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம், "அவன் அப்பா போல கோவக்காரன்", "சண்டைக் கப்பல் வந்துவிட்டது", "பெண் பிள்ளை என்றால் பொறுமை வேண்டும்", என்று ஒரு வார்த்தையில் அல்லது ஒரு விமரிசனத்துடன் பிரச்சனையை முடிக்கப் பார்க்கின்றோமா ?

பிள்ளைகள் இவ்வாறு தொழில்படுவதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது.  பாடசாலை முடிந்து வீடு வரும்போது பிள்ளைகள் பசியாகவும் களைப்பாகவும்  இருப்பார்கள்.  அதுமட்டும் அல்லாமல் பல்வேறுபட்ட வித்தியாசமான மனநிலையிலும் இருப்பார்கள்.  பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் வாங்கும் போதும் ஆசிரியரினால் பாராட்டுக்கள் வாங்கும் போதும் மகிழ்ச்சியான மனநிலையுடன் வீட்டுக்கு வருவார்கள்.  மறுதலையாக குறைவான மதிப்பெண்கள் வாங்கும் போதும் ஆசிரியரின் கண்டிப்புக்குள்ளாகும் போதும் கவலையான மனநிலையுடன் வருவார்கள்.  அதுமட்டும் அல்லாமல் நண்பர்களுடனும் சகமாணவர்களுடனும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தால் கோபமான மனநிலையுடன் வீட்டுக்கு வருவார்கள்.

பிள்ளைகள் பசி, களைப்பு, கோபம், கவலை என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது வீட்டிற்க்கு வந்ததும் இன்னும் பிரச்சனை பண்ணுவார்கள்.  அளவுக்கு அதிகமாக சத்தம் போடுதல், சண்டை போடுதல், சப்பாத்துக்கள்ளை கழற்றி எறிதல், புத்தகப் பையை வீசி எறிதல், கணநேரத்தில் வீட்டைக் குப்பையாக்குதல் என அதிக அளவில் தொந்தரவு செய்வார்கள். அமைச்சல் இல்லாத பிள்ளைகளாக நடந்து கொள்வார்கள்.  சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.  பெற்றோரும் களைப்பும் பசியும் சோர்வுமாக இருக்கிற பட்சத்தில் கோபமும் சண்டையும் கூச்சலுமே இறுதி விளைவாக அமைந்து விடும்.

இவை எல்லாவற்றையும் தவிர்த்து மனதுக்கு இனிய ஆரோக்கியமான வீட்டுச் சூழலை உண்டாக்கக் கூடிய வழிமுறைகள் சில:

1.  பிள்ளைகள் பாடசாலை முடிந்து வீடு வரும்போது அவர்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் வீட்டை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் அடுக்கி வையுங்கள்.

2.  சாப்பாட்டு மேசையை பல இயற்க்கை வண்ண உணவுகளால் அலங்கரித்து வையுங்கள்.  பிள்ளைகளிற்க்குப் பிடித்த ஒன்றிரண்டு உணவு வகைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3.  பிள்ளைகளுடன் சேர்ந்து உணவு அருந்துங்கள்.  பிள்ளைகள் உணவருந்தும் போது நீங்கள் வேறு வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

4.  சாப்பாட்டு வேளையில் பாடசாலையில் நடந்த விடயங்களைப் பற்றி உரையாடுங்கள்.  பிள்ளைகளின் தவறைக் கண்டுபிடித்து கண்டிக்காதீர்கள்.  அவர்கள் கவலையாக இருந்தால் ஆறுதல் படுத்துங்கள்.  அவர்களின் வெற்றிகளைப் பாரட்டுங்கள்.  அவர்களின் பிரச்சனகளுக்கு ஆரோக்கியமான அறிவுரை கூறுங்கள்.  சாப்பாட்டு நேரமானது மிகவும் மகிழ்சியாக இருக்க வேண்டிய ஒரு நேரமாகும்.  பிள்ளைகளை விரைவாகச் சாப்பிடுமாறு அவசரப்படுத்தாதீர்கள்.  அவர்கள் உணவருந்துவதற்க்குப் போதுமான நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள்.

5.  உணவு வேளை முடிந்ததும் பிள்ளைகளை வீட்டுப் பாடம் செய்ய ஊக்கப் படுத்துங்கள்.  சில பிள்ளைகள் தனியாகத் தம் அறைகளில் இருந்து வீட்டுப் பாடம் செய்ய விரும்புவார்கள்.  சில பிள்ளைகள் சாப்பாட்டு மேசையில் இருந்து பெரியவர்களின் உதவியுடன் செய்ய விரும்புவார்கள்.  வீட்டுப் பாடம் செய்யும் வேளையில் வீட்டை அமைதி நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

6.  வீட்டுப் பாடம் முடிந்த பின்பு பிள்ளைகள் ஓய்வு எடுக்க வலியுறுத்துங்கள்.  பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் ஓய்வு எடுங்கள்.  உங்களிற்கும் ஓய்வு தேவை என்பதை பிள்ளைகளிற்கு விளங்க வையுங்கள்.  இழந்த சக்தியை ஈடு செய்ய இரு சாராருக்கும் ஓய்வு அவசியம்.



Saturday, 15 June 2013

அளவுக்கு அதிகமான கண்டிப்பு பிள்ளைகளில் ஆபத்தான விளைவுகளை உருவாக்கும்

எம் பிள்ளைகளிற்கு நாம் காட்டுகின்ற கண்டிப்பு ஓர் அளவுடன் இருக்க வேண்டும்.  அளவுக்கு அதிகமான கண்டிப்பு பிள்ளைகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்ப்படுத்தும்.

இது என் மகளின் தோழியின் கதை.  அவள் ஓர் அழகான யப்பானியச் சிறுமி.  பார்ப்பதற்கு ஒர் ரோஜாப்பூப்போல மென்மையாக இருப்பாள்.  பழகுவதற்கு மிகவும் இனிமையானவள்.  படிப்பில் மிகவும் கெட்டிக்காரி.  என் மகளிற்கு அவளுடைய நட்புக் கிடைத்ததற்க்காக மிகவும் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்திருக்கிறேன்.

அவளுக்குப் பிரச்சனை அவளுடைய அம்மாதான்.  அவர் உண்மையிலேயே நல்லவர்தான்.  மிகவும் அக்கறையுள்ள ஒரு தாய்.  மகளுக்கு எந்தக் குறையும் வைப்பது இல்லை.  மகள் ந ல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்பதில் அதிக தீவிரம் காட்டுகின்றார்.  தப்பித் தவறி மகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கினால் அதிகம் கண்டிக்கிறார்.  இங்கே தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

தாயுடைய அளவுக்கதிகமான கண்டிப்பு மகளினுள்ளே குழப்பங்களை உண்டுபண்ணுகின்றது.   விளைவு: தாயினுடைய கண்டிப்புக்கும் நச்சரிப்புக்கும் பயந்த மகள் பரீட்சை நேரங்களில் நேர்மைக்குறைவாக நடந்து கொள்கின்றாள்.  பரீட்சையின் போது பாடப் புத்தகங்கள மறைத்து வைத்துப் பார்த்து எழுதுகின்றாள்.  சிறு காகிதத் துண்டுகளில் குறிப்புகளை எடுத்து வைத்து பரீட்சை நேரங்களில் பார்த்து எழுதுகின்றாள்.

இது ஒன்றும் அவளுடைய இயற்க்கைச் சுபாவம் இல்லை.  நல்லொழுக்கம் நிறைந்த பெற்றோரிற்குப் பிறந்த நல்லொழுக்கம் மிக்க பெண்தான் அவள். அவளுடைய இந்த நேர்மைக் குறைவான புதிய நடத்தைக்குக் காரணம் அவளுடைய தாயின் அளவுக்கு அதிகமான கண்டிப்புத்தான்.  இந்த நிலமை இப்படியே தொடர்ந்தால் பிள்ளையில் எவ்வளவு பாரதூரமான விளைவுகள் ஏற்ப்படப் போகின்றன.

பிள்ளைகளின் படிப்பு விடயங்களிலும் சுதந்திரத் தன்மையிலும் அளவுக்கு அதிகமான கண்டிப்புக் காட்டுகின்ற பெற்றோர் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். பிள்ளைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.  அவர்களுடைய மதிப்பெண்கள் கூடிக் குறைவது இயல்பான விடயம் தான்.  அதற்க்காகப் பெற்றோர் பதட்டம் அடையத் தேவையில்லை.  பிள்ளைகள் குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

Sunday, 19 May 2013

சிறுவர்கள் நண்பர்களினூடாகக் கல்வி கற்கின்றார்கள். தம் திறன்களை வளர்த்துக் கொள்கின்றார்கள்


ஒரு சராசரி மனிதராக எமக்குள்ளே எத்தனையோ திறமைக் குறைவுகளும் பலவீனங்களும் இருக்கும்.  ஆனாலும் எமக்குள்ளே இருக்கும் குறைகள் எம் பிள்ளைகளுக்கு வருவதை நாம் யாருமே விரும்புவது இல்லை. எமக்கு இருக்கும் ஒரு திறனை எம் பிள்ளைகளுக்கு ஊட்டுவதை விட எமக்கு இல்லாத ஒரு திறனை எம் பிள்ளைகளுக்கு ஊட்டுவது மிகவும் சிரமமான காரியம். அதற்க்காக நாம் மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும்.

Sunday, 21 April 2013

ஒழுங்கு செய்யப்படாத விளயாட்டுச் சூழல் ஒழுங்கற்ற விளையாட்டையே தூண்டும்

பிள்ளைகள் பாடசாலை சென்றபின் அவர்களுடைய அறை உட்பட முளு வீட்டையும் ஒதுக்கி சுத்தம் செய்வது அம்மாக்களின் நாளாந்தக் கடமையாக இருக்கிறது.  இது எல்லா வீடுகளிலும் நாளாந்தம் நடக்கின்ர செயற்ப்பாடுதான்.  ஒவ்வொரு அம்மாக்களும் என்ன நோக்கத்திற்க்காக இதைச் செய்கின்றார்களோ,  பிள்ளைகள் இதில் பெரிதும் பயன் அடைகின்றார்கள்.  பாடசாலை முடிந்து அலுத்துக் களைத்து வீடுவரும்போது  ஒழுங்காக சுத்தம் செய்யப்பட்டு அடுக்கப்பட்ட அறையும் வீடும் இன்முகமாக அவர்களை வரவேற்கும் போது அவர்கள் பெரிதும் ஆறுதல் அடைகிறார்கள்.  அவர்களுடைய பாதிக் களைப்பு அதிலேயே தீர்ந்து போகிறது.  அதுமட்டும் அல்லாமல் அவர்கள் தமது வீட்டுப் பாடங்களை நேர்த்தியாக ஆரம்பிக்கவும்  சுத்தமான வீடு தூண்டுகிறது.  அவர்களை அறியாமலே அறை மீண்டும் அழுக்காகிப் போகக் கூடாது என்பதில் அக்கறை காட்டுவார்கள்.  இது சுத்தம் பேணல் என்னும் நற்ப்பழக்கத்திற்க்கு வழிகோலுகின்றது.  இது பாடசாலைப் பிள்ளைகளிற்கு மட்டும் அல்லாது பாலர் பாடசாலைப் பிள்ளைகளிற்கும் பொருந்தும்.  சுத்தமான அறையொன்றில் விளையாட அனுமதிக்கும் போது பிள்ளைகள் நேர்த்தியாக விளையாடவும் விளையாடி முடிந்தபின் தம் விளையாட்டுச் சாமான்களை ஒழுங்காக அடுக்கி வைக்கவும் தூண்டும்.

மாறாக ஒழுங்காக சுத்தம் செய்யப்பட்டத் அறையும் வீடும் பிள்ளைகளில் ஒழுங்கற்ற விளைழாட்டைத் தூண்டுவதுடன் சுத்தம் பற்றிய எதிர்மறையான எண்ணக்கருவையும் தூண்டும்.





Tuesday, 16 April 2013

விளையாட்டு மைதானம் சிறுவர்களுக்கு சமூக வளர்ச்சியை ஏற்ப்படுத்திக் கொடுக்கும் ஓர் இடம்

ராஜேல் 3 வயது நிரம்பியவள்.  கோடை விடுமுறைக்குப் பின் பாலர் பாடசாலைக்குச் செல்ல இருக்கின்றாள்.  பெற்றோர், குடும்பம் என்ற எல்லை தாண்டி சுற்றுப்புறச் சூழலுடன் ஊடாட வேண்டிய தருணம் அவளுக்கு வந்து விட்டது. 

ஒரு மதிய வேளையில் அவளை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.  அவளுடைய 2 வது நிரம்பிய தம்பியும் கூட வந்திருந்தான்.  சிறுவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  சிறிது நேரம் கழித்து அங்கு இன்னும் இரண்டு சிறுவர்கள் விளையாட வந்தார்கள்.  அந்தச் சிறுவர்களைக் கண்டவுடன் இவர்களின் விளையாட்டுத் தடைப்பட்டது.  ராஜேலின் முகத்திலே பயமும் வெட்கமும் கலந்த ஒரு உணர்ச்சியை அவதானித்தேன். 

பயந்த சுபாவம் என்பது ஒன்றும் பிளைகளின் பிறவிக்குணம் இல்லையே.  அவளுக்கு அதிக அளவில் சமூக வளர்ச்சி ஏற்பட வேண்டி இருப்பதை உணர்ந்து கொண்டேன். எனவே அவளை எப்போதுமே வீட்டிற்குள்ளேயே விளையாட விடாமல் தினமும் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றேன்.  பிற சிறுவர்கள் மீதான அவளுக்கிருந்த பயம் படிப்படியாகக் குறைவதை அவதானித்தேன். 

இப்பொளுது எல்லாம் பொது விளையாட்டு மைதானத்தில் ராஜேல் பிற சிறுவர்களைக் கண்டால் சகஜமாகத் தன் விளையாட்டைத் தொடர்கின்றாள் அல்லது அவர்களுடன் சேர்ந்து விளையாடுகின்றாள்.  அவளைப் பாலர் பாடசாலைக்குத் தயார்ப்படுத்திய நிறைவு எனக்குள் ஏற்ப்படுகின்றது.

விளையாட்டு மைதானம் என்பது சிறுவர்களுக்கு நல்ல உடல் விருத்தியை ஏற்படுத்திக் கொடுக்கின்ற இடம் மட்டும் இல்லை.  அது நல்ல சமூக வளர்ச்சியை ஏற்ப்படுத்திக் கொடுக்கின்ற இடமும் கூட.  சிறு பிள்ளைகளை அடிக்கடி விளையாட்டு மைதானத்திற்கும் வெளி இடங்களிற்கும் அழைத்துச் செல்வது மிகவும் அத்தியாவசியமானது. 

பயந்த சுபாவமும் வெட்கப்படுகின்ற சுபாவமும் அவர்களுடய பிறவிக்குணம் என்று நினைப்பது தவறானது.  அவை படிப்படியான முயற்சியால் களையப்பட வேண்டியவை.